மும்பை: 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 5,650 விவசாயிகள் 2014 ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுவே 2015ம் ஆண்டு 8,007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வறட்சி தாண்டவம் ஆடிவரும் நிலையில், மகாராஷ்டிரவில் அதன் கோரத்தாண்டவம் அதிகரித்துள்ளது. அங்குதான் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரித்து முதல் இடம் வகிக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரப்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் 3,030 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது மொத்த தற்கொலையில் 37.8 சதவீதமாகும். இரண்டாவது இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. இங்கு 1,358 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 3வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. இங்கு 1,197 விவசாயிகம் தற்கொலை செய்து கொண்டனர். மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்கள், 94.1 சதவீதமாகும்.
3 ஆண்டு வறட்சி
போதிய அளவு பருவ மழை பெய்யாததால் கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் வறட்சி நிலவி வருகிறது. அது மிக மோசமாக விவசாயத் துறையையும், விவசாய மக்களையும் பாதித்து வருகிறது. இதனால் அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெற்று வருகிறது.
விவசாயக் கூலிகள் தற்கொலை
விவசாயிகள் தற்கொலை போன்றே விவசாயக் கூலிகளின் தற்கொலையும் மகாராஷ்டிரத்தில் அதிகமாக உள்ளது. அங்கு 1,261 விவசாயக் கூலிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் 709 பேரும், தமிழ் நாட்டில் 604 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிகரித்த தற்கொலை
விவசாயிகள் தற்கொலை, விவசாயக் கூலிகள் தற்கொலை என ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் விவசாயத் துறை சார்ந்த தற்கொலை என்பது 2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், ஒட்டு மொத்தமாக 12,360 தற்கொலைகள் 2014ம் ஆண்டும், 12,602 தற்கொலைகள் 2015ம் ஆண்டு பதிவாகியுள்ளன.
வங்கிக் கடன்
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 72.6 சதவீதம் பேர் 2 ஏக்கருக்கும் குறைவான அளவில் நிலம் வைத்திருந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பெரும்பாலனவை வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

























