மோடியால் நாட்டை வழிநடத்த முடியாது.. அத்வானியை பிரதமராக்குங்கள்.. மமதா போர்க்கொடி

mamtamodiகொல்கத்தா: பிரதமர் மோடியால் இந்தியாவை வழிநடத்த முடியாது. அதற்கான முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோர் புதிய பிரதமராக வரவேண்டும் என மமதா பானர்ஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசை கடுமையாக சாடிவருகிறார்.

மேலும் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம், பிரதமர் இல்லம் முன் மறியல் என பல்வேறு போராட்டங்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என மமதா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள மமதா, மோடிக்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்ற தேசியவாத சிந்தனை உள்ளவர்களை உடனடியாகப் பிரதமராக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, அவரால் இந்தியாவை வழிநடத்த முடியாது; அதற்கான முயற்சியில் தோற்றுவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: