ஜல்லிக்கட்டுக்காக தொடரும் மாணவர்கள் போராட்டம் – மதுரையில் 3வது நாளாக பிரம்மாண்ட பேரணி

jallikattu-protesttமதுரை: பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பற்ற வைத்த தீப்பொறி மதுரை, திருச்சி, புதுச்சேரி என பற்றி பரவி வருகிறது. திங்கட்கிழமையன்று மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுரை கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஜெய்ஹிந்த் புரம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், மீண்டும் பிரதான சாலைக்கு வந்து மத்திய அரசு, பீட்டா அமைப்பை கண்டித்து முழக்கமிட்டனர்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியைப் புறக்கணித்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணியாக சென்றனர். அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரம்மாண்ட பேரணி

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை முதலே திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நீண்டது. இதனால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

ஜல்லிக்கட்டு வேண்டும்

ஜல்லிக்கட்டு எங்களின் உரிமை. மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பு இதில் தலையிடக்கூடாது என்றும் பேரணியாக சென்ற மாணவர்கள் தெரிவித்தனர். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க நினைப்பதா என்றும் கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு நடத்துவோம்

பொங்கல் பண்டிக்கை இன்னும் சில நாட்கள் வர இருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தொடங்கி, மதுரை, திருச்சி, புதுச்சேரி என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. மத்திய அரசு செவி சாய்க்குமா?

tamil.oneindia.com

ஜல்லிக்கட்டு.. மாணவர் பேரணியில் போலீஸ் தடியடி.. மதுரையில் பரபரப்பு

jallikattu-2121மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவர்களை தடியால் அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்கள். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டப் பேரணியில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் அணிந்து திரண்டு சென்றனர்.

இந்தப் பேரணியின் போது குறிப்பிட்ட எல்லைக்கப்பால் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பேரணியில் வந்த மாணவர்களுக்கும் கடும்வாக்குவாதம் நடைபெற்றது. மேலும், தடுப்புகளைத் தாண்டிச் செல்ல மாணவர்கள் முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் மாணவர்களை தடியால் அடித்து பேரணியை கலைக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தகராறு ஏற்றபட்டது. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவியது.

tamil.oneindia.com

TAGS: