திருச்சி: பருவமழை பொய்த்துப்போனது ஒருபக்கம் இருக்க, காவிரி நீர் வராமல் சாகுபடி செய்த நெற்பயிர்களும் கருகி விட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஆண்டு சரியான விவசாயமில்லை.
மழை வரும் என்று நம்பி பயிரிட்ட விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்ததுதான் மிச்சம். அறுவடைக்கு தயாராக இருக்க வேண்டிய வயல்கள் வறண்டு போய் காணப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் பயிர்கள் கருகியதை காண சகிக்காமல் நூற்றுக்கணக்காக விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
டெல்டாவில் சோகம்
போகிப்பண்டிகை தினத்தன்றே டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டும். மஞ்சள், கரும்பு வாங்க சந்தைகளுக்கு படையெடுப்பார்கள். புத்தாடை வியாபாரம் கடை வீதிகளில் களைகட்டும். இந்த ஆண்டு எதுவுமே காணப்படவில்லை. விவசாய கிராமங்களில் ஒரு வித சோகம் காணப்படுகிறது.
களையிழந்த பண்டிகை
தை முதல் நாளன்று ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சம்பா பயிர் அறுவடை முடிந்து, புதுப்பானையில் புது மஞ்சள் கட்டி, புத்தரிசி, வெல்லம் கொண்டு பொங்கல் சமைத்து, கரும்புடன் விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் களையிழந்தே காணப்படுகிறது.
இலவச அரிசி
அரசு கொடுக்கும் இலவச அரிசிதான் இந்த ஆண்டு பொங்கலுக்கு என்கின்றனர் சில விவசாயிகள். இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் துக்க பொங்கலாகிவிட்டது என்பதுதான் உண்மை.
உற்சாகமிழந்த மக்கள்
ஆண்டு தோறும் அறுவடை செய்த நெல் மூட்டைகள் வீடுகளில் நிறைந்திருக்கும். பயிர்கள் செழித்து பசுமை சூழ்ந்திருக்கும். இந்த ஆண்டு எங்கும் வறட்சி தாண்டவமாடுவதால் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியிலும் பொங்கல் பண்டிகைக்கான உற்சாகமின்றியே காணப்படுகிறது.
பணத்தட்டுப்பாடு
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் மக்களிடைய பணப்புழக்கம் குறைந்து காணப்படுகிறது. இதனால் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனையும் கூட எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது விவசாயிகளின் கவலை. மொத்தத்தில் வறட்சி ஒருபக்கம், பணத்தட்டுபாடு மற்றொரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்பதுதான் உண்மை.