அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்து, விரைவில் டொனால்ட் டிரம்ப் தலைமையில் புதிய அரசு அமையவிருக்கிறது.
இந்த நிலையில், தற்போதைய அரசில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:
என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்குரிய முழு தகுதி இந்தியாவுக்கு உள்ளது என்பதே அதிபர் ஒபாமாவின் நிலைப்பாடு ஆகும்.
எனவே, இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்துக்கொள்வதற்காக, பிற உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எனினும், கூட்டமைப்பில் ஒரு சில உறுப்பு நாடுகள் எழுப்பும் அச்சங்களையும், சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டியிருப்பதால் இந்தியாவை சேர்த்துக் கொள்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
என்எஸ்ஜியில் இந்தியாவை இணைத்துக் கொள்ள ஒபாமா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை புதிய அரசும் தொடரும் என நம்புகிறேன்.
தற்போதைய நிலையில், என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்கு ஒரே முட்டுக்கட்டையாக இருப்பது சீனாதான். அந்த முட்டுக்கட்டையை சரி செய்வதுதான் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அம்சங்கள் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் கூறி இந்தியா அதில் கையெழுத்திட மறுத்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், இஸ்ரேல், தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையிலும், தனது அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு இந்தியா பரவச் செய்யாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்தச் சூழலில், அணுசக்தி தொடர்பான பொருள்கள் மற்றும் கருவிகளின் ஏற்றுமதியை உலகளவில் கட்டுப்படுத்தும் என்எஸ்ஜி-யில் இணைய இந்தியா முயன்று வருகிறது.
அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 48 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
எனினும், என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்கு ஆரம்பம் முதல் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவை என்எஸ்ஜியில் இணைப்பதற்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்து வருவதால், இந்தியாவாவை அந்த அமைப்பில் சேர்த்துக் கொள்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது எனவும், அது தொடர்பாக உறுப்பு நாடுகளிடையே உடன்பாடு ஏற்படும்வரை இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை எனவும் சீனா கூறி வருகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத, தனது மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானை மனதில் கொண்டே சீனா இவ்வாறு கூறி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானும், என்எஸ்ஜி உறுப்பினராக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com
இந்தியா சீனாவை விட முன்னேறினால் தான் ஏதும் நடக்கும் -இல்லாவிடில் சீனிவாசன் முட்டுக்கட்டையாகவே இருப்பான்.