குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக் கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பம்….. மக்கள் நிராகரிக்கின்றனர்!
ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!
இளைஞர்களும் மாணவர்களும் சினிமா நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் பாலாபிஷேகங்களும் கட் அவுட்டுகளும் மாலைகளும் போட்டு திரிந்தனர். மது, புகை பிடிப்பது, சினிமா மோகம், கிரிக்கெட் மோகம், பான்பராக் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி நாட்டின் உரிமைக்காக மாணவர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்போது மாணவர்கள் மத்தியில் ஒரு நேர்வழியில் தங்களுடைய போர்க்குணத்தைக் காட்ட ஆரம்பித்தது நல்ல துவக்கமே. தமிழகத்தின் பண்பாடான ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டும் இல்லாமல் வேறு தலையாய பிரச்சனைகளுக்கும் இந்த இளைஞர்கள் போராடினால் தமிழ் கூறும் நல்லுலகம் வளம் பெறும். தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகின்றன.
இதற்கான தீர்வு எட்டப்படாமலும் மத்திய-மாநில அரசுகளின் பாராமுகத்தால் நம்முடைய உரிமைகளும் நம்முடைய நலன்களும் நமக்கான திட்டங்களும் நெடுங்காலமாக கோப்புகளில் டெல்லி பாதுஷாக்களிடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தூசிபடிந்து தூங்குகின்றன.
என்னென்ன திட்டங்கள்? என்னென்ன உரிமைகள் என்பதை வரிசைப்படுத்தி இன்று போராடும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இதற்கான முழுமையான தரவுகளும் குறிப்புகளும் என்னுடைய வலைப்பூ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
1) சேது சமுத்திர திட்டம்- 165 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டுவிட்டது.
2) கடலூர்- நாகை- குளச்சல் துறைமுகத் திட்டங்கள் வெறும் கோரிக்கைகளாகவே உள்ளன.
3) சுமார் 10-க்கும் மேலான மீன்பிடி துறைமுகங்களான வானகிரி, திருக்கடையூர், மாமல்லபுரம், மூக்கையூர், திரிசோபுரம், சிலம்பிமங்கலம், காட்டுப்பள்ளி, பாம்பன் – ராமேஸ்வரம், புன்னக்காயல், மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி போன்ற பல மீன்பிடி துறைமுகங்கள் கிடப்பில் உள்ளன.
4) அகல ரயில் பாதை திட்டங்கள் ஆமை வேகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரம்பித்தன. இன்னும் செங்கோட்டை- புனலூர்-கொல்லம் மார்க்கம்; மதுரை- போடிநாயக்கனூர்; திண்டுக்கல்- பழனி வழியாக சபரிமலை செல்லும் மார்க்கமும் நிலுவையிலேயே உள்ளன.
5) விவசாயிகள் இதுவரை துப்பாக்கிச் சூட்டில் 60 பேரும் சமீபத்தில் 2012-ல் இருந்து தற்கொலையாலும் மாரடைப்பாலும் கிட்டத்தட்ட 300 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இது குறித்து மத்திய- மாநில அரசுகளுக்கு தடுக்கக் கூட மனம் கூட வரவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நலத்திட்டங்கள் எதுவும் செய்வதில்லை. அனைத்து நெல் உற்பத்தி விவசாயிகள், கரும்பு உற்பத்தி விவசாயிகள், நவதானிய உற்பத்தி விவசாயிகள், பணப் பயிர் உற்பத்தி விவசாயிகள், பருத்தி விவசாயிகள், தென்னை விவசாயிகள், குமரி மாவட்ட ரப்பர் தோட்ட விவசாயிகள், தேயிலை தோட்ட விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி பொருளுக்கு நியாயமான லாப விலையை அவர்களே நிர்ணயிக்கக் கூடிய உரிமைகள் வழங்கவும் வேண்டும்.
6) விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி கார்ப்பரேட்டுகள் வசம் வழங்குவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கிறது.
7) இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக அர்ப்பணித்து குரல் கொடுப்பது.
8) உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடப்பட்டு நைனிடாலில் இந்த திட்டத்தை விரிவுபடுத்திவிட்டனர். இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தெருவில் நிற்கின்றனர்.
9) சேலம் இரும்பாலையும் விரிவாக்கம் செய்யாமல் சர்வதேச அளவில் சேலம் இரும்பாலையின் இரும்புகளுக்கு மதிப்பு இருந்தும் உற்பத்தி கூடுதலாக்க மத்திய அரசுக்கு மனம் இல்லாமலே இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் எவர்சில்வர், ஆஸ்திரேலியா சந்தையில் அதிக மதிப்புள்ளது.
10) கூடங்குளம் அணு உலை பிரச்சனை தீராத சிக்கலாக உள்ளது. மக்களை பாதிக்கும் அணுக் கழிவை எங்கே புதைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
11) நோக்கியோ தொழிற்சாலை முற்றிலும் மூடப்பட்டு அங்கும் தொழிலாளர்கள் தெருவில் நிற்கின்றனர்; ஆந்திரா எல்லையில் தடாவில் திறக்கப்பட்டுள்ளது.
12) தேனியில் நியூட்ரினோ திட்டம் மக்களின் விருப்பத்துக்கு மாற்றாக நிறைவேற்ற மத்திய அரசு முயலுகிறது.
13) 40 ஆண்டுகாலத்துக்கு முன்னர் திட்டமிட்டு மரக்காணத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா, பெத்தகஞ்சம் ஒடிஷா எல்லை வரை 420 கி.மீ வரை உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் செயலுக்கு வராமலே இருக்கிறது.
14) தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய நீர்வழிப் போக்குவரத்து நான்கும் நிலுவையிலேயே உள்ளது.
15) நெஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டண கொள்ளையை பொறுக்க முடியவில்லை.
16) தமிழக நீர்வள ஆதாரங்களான குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயினார், உள்ளாறு, செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா; சிறுவானி, பம்பாறு, பவானி ஆகிய பல நீர் ஆதார பிரச்சனைகள் கேரளாவோடு பேசித் தீர்க்க முடியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
17) காவேரி- ஒகேனக்கல்- தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் சிக்கலை கர்நாடகாவுடனும் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆந்திராவுடன் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது.
18) தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் கேரளா அச்சன்கோவில்- பம்பை; தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்கும் திட்டம் 1975-ல் இருந்தே கொள்கை வடிவில் இருக்கிறது; உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் இதற்கான ஒப்புதல் இருந்தும் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. மத்திய அரசும் பாராமுகமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறும். என்னுடைய வழக்கு முடிந்தும் இதற்கான செயல்பாட்டு சாத்தியக் கூறுகள் கண்முன்னே தெரியவில்லை.
19) தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு மற்றும் காவேரி- குண்டாறு- குடகனாறு இணைப்பு ; பொன்னியாறு- பாலாறு என 3 ஆற்று இணைப்பு திட்டங்களும் நிதி ஆதாரங்கள் இல்லாமல் நிலுவையில் உள்ளன.
20) நாட்டு விடுதலைக்கு முன் 50,000 ஏரி குளங்கள் இருந்ததாக கணக்கு. இன்றைக்கு அதில் பாதியாக குறைந்து 20,000 எண்ணிக்கையில்தான் உள்ளன. சென்னை, மதுரையைச் சுற்றி இருந்த 600 குளங்கள் காணாமல் போய்விட்டன. ரியல் எஸ்டேட் நடத்தும் கொடியவர்கள் கைவரிசையால் இயற்கையாக அமைந்த நீர் நிலைகள் காணாமல் போனது வேதனையைத் தருகிறது. இதை மீட்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள குளம், ஆறு, நீர்நிலைகளை தூர்வாரி, மதகுகளை சீர்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
21) நமக்கு உரிமையான கச்சத்தீவை இழந்தும் அது குறித்து மத்திய சர்க்கார், வாய்மூடி மெளனியாக இதுவரை இருக்கிறது.
22) மீனவர் பிரச்சனையில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை பலமுறை தமிழகம் வலியுறுத்தியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்த அவலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை 1000 மீனவர்களு9க்கு9 மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
23) உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
24) வடமாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியும் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பதைப் போல சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
25) அந்தமானில் வாழும் தமிழர்களின் வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. அதை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
26) மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளான அழகர்கோவில் மலை, சிறுமலை, யானை மலை போன்ற கொள்ளிமலை வரையிலான மலைகளின் சுற்றுச் சூழலையும், வனவளங்களையும், இயற்கை வளங்களையும், விலங்கினத்தையும் காக்க வேண்டும். கஸ்தூரி ரங்கன், காட்கில் அறிக்கையில் சொல்லப்பட்ட நியாயமான சில பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும்.
27) கருவேல மரங்களை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
28) வேலூர் சிறையில் வாடும் ராஜீவ் கொலை தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு கயிற்றில் இருந்து விடுவிக்க வேண்டும்.
29) நீட் தேர்வு முறை கூடாது என்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.
30) தேனி மாவட்டம் கண்ணகி கோட்டம் முழுமையாக தமிழகத்துக்குச் சொந்தமானது என்ற உறுதியை நிலைநாட்ட வேண்டும்.
31) தென்மாவட்டங்களில் கடற்கரையோ தாதுமணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையை புதுப்பிக்க வேண்டும்.
32) மணல் கொள்ளையை அறவே தடுக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் 41 ஆறுகளில் மணலே அள்ள முடியாது. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் மணல் செல்கிறது. எவ்வளவு ஒரு கேவலமான நிலை? அசைவ ஹோட்டல்களில் ஈரல், கால், தலை என விலைகளைப் போட்டிருப்பது போல கேரளாவில் காவேரி மணல், தாமிரபரணி மணல், வைப்பாறு மணல், தேனி மணல் என்று விலைபட்டியல் போட்டு விற்கிற கேவலமான அவல நிலை இருக்கிறது.
33) மலைகளையும் பூமியையும் பாளம் பாளமாக வெட்டி கிரானைட் கற்களை கொள்ளையடித்துவிட்டனர்.
34) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
35) நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
36) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளை திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இருப்பதை பிரித்து புதியதாக திருநெல்வேலி ரயில்வே கோட்டத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
37) கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த நெசவாலைகள், பனியன் ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அத்தொழிலை சீரமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
38) வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டும் என்றால் மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள், பன்னாட்டு விமான நிலையங்களாக மாற்றவும் உரிய விமான சேவைகளை அதிகரிக்கவும் வேண்டும். சேலம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் விமான நிலையங்களை இயங்கக் கூடிய வகையில் நிறுவப்பட வேண்டும்.
39) எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் தாமதம் இல்லாமல் அமைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் ஐஐடி மத்திய பல்கலைக் கழகத்தை தென்மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்லிலோ, திருநெல்வேலியிலோ அமைக்கப்பட வேண்டும்.
40) திருநெல்வேலி அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய அரசின் பரிசீலனையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
41) மதுரை அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அகழாய்வாராய்ச்சி பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
42) கேரளாவில் அட்டப்பாடி, கர்நாடகாவில் பெங்களூரு, மாண்டியா, கோலார், மும்பை ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை பாதுகாக்கும் நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட வேண்டும்.
43) கொங்கு மண்டலத்தை பாதிக்கக் கூடிய கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும். இம்மாதிரியே ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர், மதுராந்தகம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக எரிவாய் குழாய் பதிக்கவும் திட்டங்கள் உள்ளன. கடலூரில் இருந்து மேற்கு திசையை நோக்கியும் இந்த எரிவாயு குழாய் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
44) தஞ்சை டெல்டாவை வஞ்சிக்கும் மீத்தேன் திட்டத்தை முழுமையாக நிறுத்தப்பட்டது என்ற உறுதிமொழியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
45) இலங்கைக்கான இந்திய தூதராக ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும்; இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணையை ஐநா மன்றத்தில் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிலும் தமிழக அரசிலும் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை முன்னெடுக்க வெகுஜன (Refrendum) வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவத்தை சிங்கள அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழர்களிடம் பறிக்கப்பட்ட விவசாய காணி நிலங்களையும் வீடுகளையும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். புதியதாக எழுதப்படும் இலங்கை அரசியல் சட்டத்தில் சமஷ்டி அமைப்பையும் மத்திய மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், வருவாய், காவல்துறை, மீன்பிடி போன்ற அதிகாரங்கள் முழுமையாக தரப்பட வேண்டும். இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் முதல்வர்கள் அதிகாரமற்ற பொம்மை முதல்வர்களாக காட்சி தருகின்றனர்.
46) இந்தியாவின் வடகிழக்கும் வடமேற்கும் சீனா, பாகிஸ்தான் மூலமாக போர்களை சந்தித்தோம். தீபகற்ப இந்தியா அமைதி மண்டலமாக திகழ்ந்தது. இன்றைய தென்கிழக்கு ஆசிய புவி அரசியலில் இந்து மகாசமுத்திர பிரச்சனைகளால் தெற்கிலும் நமது அமைதி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது. அந்த வகையில் வங்கக் கடலிலும் இந்து மகாசமுத்திரத்திலும் அரபிக் கடலிலும் இந்தியாவின் ஆளுமையை உலக அளவில் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
47) தமிழகத்தில் உள்ள சித்தனவாசல், கழுகுமலை வெட்டுவான் கோவில், மாமல்லபுரம், திண்டுக்கல் மலைக்கோட்டை, யானைமலை சிற்பங்கள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
48) தமிழகத்தில் விவசாயம், நெசவு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், பூட்டுத் தொழில் போன்றவை சிறு குடிசைத் தொழில்களாக விளங்கின. இவை அனைத்தும் காக்கப்பட வேண்டும்.
49) இந்தியாவின் வரலாற்றை மறு ஆய்வு செய்து தமிழகத்தில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும். பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, விருப்பாட்சி கோபால்நாயக்கர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் என்ற விடுதலைப் போர் அக்கால தளபதிகள் மட்டுமின்றி பண்டைய வரலாற்றில் முதல் சங்கம் மற்றும் கபாடபுர காலத்தில் இருந்து வரலாறுகள் ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்.
50) தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா இந்த மாநிலங்கள் ஒரு கூட்டமைப்பாக அமைந்து தங்களுக்கான பிரச்சனைகளை முறையாகப் பேசித் தீர்க்கும் வகையில் சட்டப்பூர்வமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
51) வங்கக் கடலில் போக்குவரத்து கப்பல்களை குமரியில் இருந்து நாகப்பட்டினம், சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, அந்தமான், இலங்கை என செல்லக் கூடிய வகையிலான கப்பல் போக்குவரத்தை நவீனப்படுத்தி பயணிகள் பயணத்துக்காக இயக்க வேண்டும்.
52) பொதிகை போன்ற மாநில தொலைக்காட்சிகள் வெகுஜன தொலைக்காட்சிகளாக பார்க்கக் கூடிய அம்சங்கள் இடம்பெறும் வகையில் நவீனப்படுத்த வேண்டும்.
53) மாநில சுயாட்சியை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிதி, ராணுவம், வெளிவிவகாரம், உள்துறை, தகவல் தொடர்பு, ரயில்வே, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும். நீதிபதி சர்க்காரியா குழு, நீதிபதி பூஞ்ச் குழு, நீதிபதி ராஜமன்னார் குழு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக குழு அளித்த பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு வழங்கக் கூடிய அதிகாரங்களை முறைப்படி வழங்கி சமஷ்டி அமைப்பை உறுதி செய்ய வேண்டும்.
54) தற்போது மோடி அரசு நதிநீர் தீர்ப்பாயத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அது மேலும் பிரச்சனைகளை உருவாக்கும். அப்படி ஒரு அமைப்பு தேவையும் இல்லை.
55) நதிநீர் தீர்ப்புகளை கண்டிப்பான முறையில் உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.
56) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன விவகாரத்தில் உறுதியான ஒரு முடிவை தீர்வாக மத்திய அரசு எடுக்க வேண்டும்; நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பங்கை தமிழகத்துக்கு அதிகரித்து வழங்க வேண்டும்; ராயல்டி தொகையையும் அதிகரித்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
57) கொடைக்கானலில் பெரும் சுற்றுச் சூழலை ஏற்படுத்தியுள்ள பாதரச ஆலையை அறவே மூட வேண்டும்.
58) திருவண்ணாமலை கவுந்தி மலை- வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கவும் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களும் உரிமைகளும் கிடைக்காமல் சுற்றுச் சூழலை பாதித்து மராட்டிய ரத்தனகிரியில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.
கூடங்குளம் அணு ஆலை கூடாது என போராடியும் மேலும் அணு உலைகளை அமைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.
கேரளா பிளிச்சிமீடாவில் இருந்து துரத்தப்பட்ட கோக் ஆலை, திருநெல்வேலி கங்கைகொண்டானில் நிலை கொண்டுவிட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் புற்றுநோயால் மக்கள் மாண்டுபோகின்றனர்.
தமிழகம் என்ன ஆலைகளின் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடா? வரலாற்றில் இடம்பெற்ற தானிய களஞ்சியம் தஞ்சையின் பெருமையை மாசுபட வைக்கிற வகையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு தீங்கு நேரும் தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பிரச்சனைகளாக இப்படி ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இதற்காகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்