சென்னை: ஜல்லிக்கட்டு சட்ட வரைவு தமிழக சட்டசபை கூட்டத்தில் தாக்கலாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு கவர்னர் அனுமதி கொடுத்த நிலையில், நிரந்தர சட்டமே தேவை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டனர்.
இதனிடையே முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர சட்டத்திற்கு மாற்றாக வரும் 23ம் தேதி பேரவையில் சட்ட வரைவு கொண்டுவரப்படும். அந்த சட்ட மன்ற கூட்டத் தொடரிலேயே இது நிறைவேற்றப்படும். இவ்வாறு தெரிவித்துள்ள பன்னீர் செல்வம் அவசரச் சட்டம் பிறப்பிக்க உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்டத்தை இயற்றினாலும், மத்திய அரசும் அதுபோன்ற சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதாக கூறப்படுவதால் முதல்வர் வாக்குறுதியை மக்கள் ஏற்கவில்லை.