சொன்னபடி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கிவிட்டார் சீமான்.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க கடந்த 16-ம் தேதி மதுரை வந்தார் சீமான்.
அரசியல்வாதிகள் எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்’ என்று மாணவர்கள் கறாராக அறிவித்ததால், தமுக்கம் அருகே அவுட் போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக 17-ம் தேதி தனியாக போராட்டத்தை தொடர்ந்தார்.
அப்போது, போராட்டம் குறித்து பேசிய சீமான், வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று சொன்னவர், அதுவரை மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
சொன்னபடி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான்.
அலங்காநல்லூரில் நடத்துவேன்’ என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டார் சீமான்.
இதற்கான ஏற்பாடுகளை மிக இரகசியமாக செய்த அவரது கட்சியினர், மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
தகவல் வெளியாகி விடும் என்பதால் குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
சீமானைத் தொடர்ந்து கண்காணித்து வந்த உளவுத்துறையால் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்போகும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டுள்ளனர்.
– Vikatan