கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம்

republicசென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது.

கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள்.

இந்நிலையில், போலீசாரின் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், குடியரசு தினத்திற்கு தங்கள் வீடுகளில் இருந்து ஒரு குழந்தை கூட போகாது என்று கோபத்தோடு கூறியிருந்தார்கள். அதற்கேற்ப யாரும் இன்று குடியரசு தின கலை விழா நிகழ்ச்சியை காண மெரினாவிற்கு செல்லவில்லை.

இதே போன்று, மதுரை, அலங்காநல்லூர், கோவை, ஈரோடு என பல இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து, மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்து வீட்டிலேயே உள்ளனர். போலீசார் காட்டிய கடுமையான கெடுபிடியும், வன்முறை சம்பவங்களும் மக்களை பெரும் அளவில் பாதிப்படைய செய்துள்ளன.

வன்முறை சம்பவம் நடந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் இன்னும் தீராமல் இருக்கிறது. போலீசாரின் வன்முறை தாக்குதலுக்கு பொதுமக்கள் இடத்திலும் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவேதான், தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா களையிழந்து காணப்படுகிறது.

-http://tamil.oneindia.com

TAGS: