பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

OPSபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரை:-

காவிரி நடுவர் மன்றமானது 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட இறுதி உத்தரவில், பாம்பாறு உப படுகைக்கென 3 டி.எம்.சி. அடி நீரை கேரளத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அதில், பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி எனும் இடத்தில் செங்கலாறு திட்டத்துக்கு 0.80 டி.எம்.சி., நீர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் 2 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள ஒரு அணையைக் கட்டுவதற்கு கேரள முதல்வர் காணொளிக் காட்சி வழியாக அடிக்கல் நாட்டியுள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதனிடையே, நடுவர் மன்ற உத்தரவுக்கு மாறாக எந்தவொரு திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசின் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் சட்டப் பேரவையில் தனித் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், அணை கட்டும் பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கி உள்ளதாக பெறப்பட்ட செய்தியின் அடிப்படையில், கேரள அரசுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

இதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரதமருக்கு கடிதம்

தடுப்பணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் முக்கிய துணை நதியான அமராவதி ஆற்றின் நீர்வரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அமராவதி ஆற்றின் துணை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி என்ற இடத்தில், அணை கட்டும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறும், கேரள அரசின் மேலும் ஒருநடவடிக்கையாகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில், கேரள அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்படும் வரை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரி பாசனப்பகுதிகளில் எத்தகைய திட்டத்தையும் தொடங்கக் கூடாது என்று கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: