தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட வீரரை சிறையில் தள்ளிய இந்திய ராணுவம்?

எல்லைப் பாதுகாப்பு படையில் தரமான உணவுகள் வினியோகிக்கப்படவில்லை என, சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு புகார் தெரிவித்த வீரர் தேஜ்பகதுர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் எல்லைப் பாதுகாப்புப்படையை சேர்ந்த தேஜ்பகதுர் என்ற வீரர், முகாம்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், கடினமான சூழ்நிலையிலேயே பணிபுரிவதாகவும் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதன்பிறகு, அவருக்கு இடம் மாற்றுதல், கட்டாய ஓய்வு பெற வற்புறுத்துதல் போன்ற இடையூறுகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஜனவரி மாதத்தோடு பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, கட்டாய பணி ஓய்வை தேஜ்பகதுர் அறிவித்திருந்தார்.

இதனிடையே, தேஜ் பகதூர் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவி ஷர்மிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமது கணவர் ஜனவரி 30ம் திகதி பணி ஓய்வு பெற்று, கடந்த 31ம் திகதியே வீடு திரும்புவார் என எதிர்பார்த்ததாகவும்,

ஆனால் நேற்றைய தினம் மற்றொரு வீரரின் அலைபேசியிலிருந்து பேசிய தேஜ்பகதுர், தனது கட்டாய ஓய்வு ரத்துசெய்யப்பட்டுவிட்டதாகவும், தன்னை சிறைவைத்து துன்புறுத்துவதாக விரக்தியுடன் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவருக்கு மன ரீதியாக உயரதிகாரிகள் துன்புறுத்தல் அளித்து வருவதாகவும் ஷர்மிளா புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேஜ்பகதுர் மனைவியின் குற்றச்சாட்டை எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் மறுத்துள்ளதோடு, பணியில் இருக்கும் வீரர்கள் யாரும் அலைபேசிகளை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு கமாண்டோக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-lankasri.com

TAGS: