வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த போராட்டத்தில் வியாழக்கிழமை வன்முறை வெடித்தது.
சுமார் 1,000 போராட்டக்காரர்கள் அந்த மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் உள்ள நகராட்சி கவுன்சில் அலுவலகத்துக்கும், மாவட்ட ஆணையர் அலுவலகத்துக்கும் தீ வைத்தனர்.
சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமானதைத் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் கோஹிமாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்த மாநில பழங்குடியின அமைப்புகள் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், கோஹிமாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
எனினும், அவர்கள் செல்ல மறுத்து வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அந்த இளைஞர்களுக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்த போராட்டக்காரர்கள், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.செலியங், மாநில அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவிடம் மனு அளித்தனர்.
இந்த சூழலில் போராட்டக்காரர்கள் 1,000 பேர் மாநில தலைமைச் செயலகத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி சென்றனர். அத்துடன், நகராட்சி கவுன்சில் கட்டடம், மாவட்ட ஆணையர் அலுவலகத்துக்கும் தீ வைத்தனர்.
முன்னதாக, 12 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நாகாலாந்து அரசு புதன்கிழமை அறிவித்தது.
-http://www.dinamani.com