மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் 900 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. காளைகளை அடக்க 1500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையால் 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை.
மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம், புரட்சியினால் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்றன. காளைகளை அடக்கியவர்கள் கை நிறைய பரிசுகளை அள்ளிச்சென்றனர்.
அதேபோல் பிரசிதிபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. காலை 9 மணி அளவில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் 354 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் நிறைவில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உட்பட மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற உள்ளன. காளைகளை அடக்க 1500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு கார், இரு சக்கர வாகனம், டிராக்டர், டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக விழாக்குழு தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு போட்டியை காண இப்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருப்பதால் சுமார் 3 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.