ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பிறகு கருப்புப் பணம் அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

pc (1)ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிகழ் நிதியாண்டில் 1.5 சதவீதம் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய ப.சிதம்பரம், மத்திய அரசை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்கும் வகையில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவையில் சிதம்பரம் மேலும் பேசியதாவது:

நாட்டில் 15 கோடி பேர் தினக் கூலிகளாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், 25.5 கோடி மக்கள் நாள்தோறும் ஊதியம் பெறுபவர்களாக இருக்கின்றனர்.
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்த 40 கோடி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருங்காலங்களில், மத்திய பாஜக அரசை அவர்கள் மன்னிக்கலாம். ஆனால், கடந்த 8 வாரங்களாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒருபோதும் அவர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது மத்திய அரசு எடுத்த மிக மோசமான முடிவாகும். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டதற்கு ஓரிரு நாள்களில் புதிய ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அதற்கு அடுத்த சில தினங்களிலேயே கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் பலரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் பல கோடி மதிப்பில் புதிய ரூ.2,000 நோட்டுகள் இருந்தன.

அவை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைத்தன? ரிசர்வ் வங்கி அச்சகத்திலிருந்து நேரடியாக அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்துதான் உள்ளதே தவிர ஒழியவில்லை.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்றார் ப.சிதம்பரம்.

-http://www.dinamani.com

TAGS: