பன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு.. எம்.ஜி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம்

panselvamசென்னை: அதிமுகவில் வலுவான தலைவர்கள் இல்லாததால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரையில், நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தல்கள் அனைத்திலும் திமுக தோல்வியையே தழுவியது. எம்.ஜி.ஆர் கடைசிவரை முதல்வராகவே இருந்து மறைந்தார். இப்போது அதிமுகவுக்கு அதே நிலை. எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கடைசி நேர சில செயல்பாடுகளால் மக்கள் செல்வாக்கு மிக்க முதல்வராக விளங்கினார் ஓ.பன்னீர்செல்வம். அவரை கட்சியை விட்டு நீக்கியதன் காரணமாக இப்போது அதிமுக அதலபாதாழத்தில் சிக்கியுள்ளது.

கருணாநிதியாலேயே முடியவில்லை

எம்.ஜி.ஆரை நீக்கிய திமுகவுக்காவது கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமை இருந்தது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய அதிமுகவிடம் இருப்பது சசிகலாவும், டி.டி.வி தினகரனும்தான். இவர்களை நம்பி மக்கள் ஓட்டுப்போடப்போவதில்லை என்பது தற்போதைய கள நிலவரம். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி அரசு ஏதாவது கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்கள் மனதை மாற்றினால்தான் உண்டு என்பதே இப்போதைய யதார்த்த சூழல்.

அதிமுகவுக்கு பிரச்சினை

இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சென்று அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்வது அந்த கட்சியை இப்போதுள்ள நிலையைவிட மோசமாக பாதிக்கும். இதை அறிந்துள்ள அதிமுக புள்ளிகள், பன்னீருக்கு மீண்டும் வலை விரித்து வருகிறார்கள். இதற்கான சிக்னல் சிறையிலுள்ள சசிகலாவிடமிருந்து தினகரன் மூலமாக கட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் திடீர் பாசம்

அதிமுக துணை பொதுச்செயலராக நேற்று தினகரன் பொறுப்பேற்றபோது, பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு திரும்பினால் ஏற்போம் என கூறி சமாதான தூது விட்டு பார்த்தார். ஓ.பி.எஸ் தரப்பு அசையவில்லை. இந்நிலையில், மாலையில் சசிகலா கோஷ்டியுடன் இணைந்து செயல்படும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென தினகரனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஓ.பி.எஸ் ‘அண்ணனை’ வைக்க தயார் என்று அடுத்த பாச வலையை வீசினார். அதேநேரம், ஏன் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளிக்க முடியாமல் எடப்பாடி அண்ணனே இருந்துவிட்டு போகட்டும், கட்சி தலைமைக்கு ஓ.பி.எஸ் வரட்டும் என கூறி சமாளித்தார் தீபக். இது அண்ணன்-தம்பி சண்டை என்று கூறி தமிழக மக்களை ஏமாளிகளாக்க பார்க்கிறார் தீபக்.

அசையாத பன்னீர் தரப்பு

எப்படியாவது ஓ.பன்னீர்செல்வத்தை வளைத்துவிட வேண்டும் என்று அதிமுக தரப்பு பகீரத பிரயத்தனம் செய்துவருவதன் வெளிப்பாடே இந்த அழைப்புகள். ஆனால் கள நிலவரம் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்போ அசைவதாக இல்லை. சசிகலா தரப்புக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டை அவர் இன்று முன்வைப்பார் என்று பீடிகை போட்டுள்ளார் மாஃபா பாண்டியராஜன். ஒருவேளை அதிமுக பக்கம் ஓ.பி.எஸ் மீண்டும் போனால் அவரது செல்வாக்கு முழுக்க சரிந்துவிடும் என்பதை உணர்ந்துதான் அவர் தனி ஆவர்த்தனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

-http://tamil.oneindia.com

TAGS: