நாகப்பட்டினம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் ஆர்ப்பாட்டம் செய்த 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள அழகிய விவசாய கிராமமான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து பாழ்நிலமாகிவிடும். இதனால் இந்த திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாகையில் 28 இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி தண்ணீர் அமைப்பை சேர்ந்த 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். திருச்சியில் இருந்த நெடுவாசல் நோக்கி கிளம்பிய அவர்களை விமான நிலையம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.