ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது: மத்திய அரசு

hydrocarbonடெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பெருக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய பொருளாதார விவகாரத்துறைக்கான மந்திரிகள் குழு நாட்டில் 31 சிறிய ஒப்பந்த பகுதிகளுக்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் தினமும் 600 டன் எண்ணெயும், 30 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயுவும் உற்பத்தி செய்யப்படும்.

இதில் இப்போது 3 நடவடிக்கை பகுதிகளில் (சுமார் 1461 சதுர கிலோமீட்டர்) இயற்கை எரிவாயு எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் 700 கிணறுகளுக்கு மேல் இதற்காக தோண்டப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்போ, சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை.

புதுச்சேரி காரைக்கால் பகுதியில் (10.4 சதுர கிலோமீட்டர்), புதுக்கோட்டை நெடுவாசலில் (10 சதுர கி.மீ.) ஆகிய 2 சிறு ஒப்பந்த பகுதிகளில் 4.30 லட்சம் டன் எண்ணெய் மற்றும் அதற்கு சமமான எரிவாயு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான தோண்டும் நடவடிக்கைகள் குறைந்த அளவு நிலபரப்பிலேயே (பொதுவாக 120-க்கு 120 சதுர மீட்டர்) நடைபெறுகிறது. அதோடு இந்த பணியில் ஈடுபடுபவர்கள் கடுமையான சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்ற வேண்டும். இதனால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட மொத்த பகுதியிலும் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது.

எண்ணெய், இயற்கை எரிவாயு மிகவும் ஆழமான நிலப்பகுதியில் (ஆயிரம் மீட்டர்) இருந்து எடுக்கப்படுகிறது. எனவே அதைவிட ஆழமான பகுதியில் உள்ள நிலத்தடி நீரோ, நீரோட்டங்களோ பாதிக்கப்படாது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் கையாளப்படும் முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. உலகில் இதுவரை அந்த பகுதியில் உள்ள நீராதாரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அதோடு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக துளையிடும்போது சிமெண்டு உறைகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது.

ஹைட்ரோ கார்பனில் உள்ள முதன்மையான இயற்கை எரிவாயு மீத்தேன் உலகம் முழுவதும் வீடுகளில் சமையல் எரிவாயுவாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை எரிவாயு எடுக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதாலேயே அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறுவது தவறு.

இது இயற்கை எரிவாயு எடுப்பதற்காக சுற்றுச்சூழல் முன் அனுமதி துறை அமைச்சகத்தில் இருந்து பெறுவதற்கான வழக்கமான நடவடிக்கை தான். பொதுமக்கள் கருத்து கேட்பதும் இந்த முன் அனுமதிக்கான அங்கம் தான்.

இதற்கான ஒப்பந்தம் விடப்பட்ட தேதியில் இருந்து 3 வருடங்களில் உற்பத்தி தொடங்கப்பட வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும், மக்களுக்கும் பல பொருளாதார பலன்கள் கிடைக்கும். ராயல்டி, மதிப்பு கூடுதல் வரி, கூடுதல் வேலைவாய்ப்பு மற்றும் மாநில பொருளாதார வளர்ச்சி போன்ற பலன்கள் கிடைக்கும்.

திட்ட மதிப்பீட்டின்படி இந்த 2 ஒப்பந்த பகுதிகளில் இருந்து மொத்த வருவாய் ரூ.300 கோடி கிடைக்கும் என்றும், மாநில அரசுக்கு ராயல்டியாக ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும். 500 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: