மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

pon-radhakrishnanடெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என பொதுமக்கள் நெடுவாசலில் தொடர் முழக்க போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இதையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்து பேசினார். அப்போது, நெடுவாசல் திட்டம் மற்றும் அதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார்.

பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

tamil.oneindia.com

 

TAGS: