நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. உங்கள் உணர்வுகளை பகிரலாம்!!

neduvasal-protesசென்னை: ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது.

தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. தமிழர்களால் அதை முதலில் புரிந்து கொள்ளக் கூட முடியாத அவல நிலை. நெடுவாசல் மக்கள்தான் முதலில் தனித்துக் குரல் எழுப்பினர். அவர்களின் அவலக் குரல் மிகவும் தாமதமாகத்தான் தமிழகத்தின் பல பகுதிகளைத் தொட்டது.

ஏற்கனவே காவிரி டெல்டாவை கிட்டத்தட்ட பொட்டல் காடாக்கி விட்டது மத்திய அரசு. அங்கு விவசாயம் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது. மறுபக்கம் மீத்தேன், ஷேல் வாயு என அரக்கர்கள் அடுத்தடுத்து இறக்கப்பட்டனர். இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட முயற்சிக்கின்றனர்.

2009ம் ஆண்டு முதலே இந்த அரக்கன் சத்தமில்லாமல் நெடுவாசலை வியாபிக்கத் தொடங்கினான். இன்று விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கிறான். ஆரம்பத்தில் விவசாயிகள் என்னவென்று விவரம் தெரியாமல் நிலங்களை குத்தகைக்குக் கொடுத்து விட்டு இப்போதுதான் உண்மை தெரிந்து அதிர்ந்து நிற்கின்றனர். பிப்ரவரி 19ம் தேதி முதல் நெடுவாசல் போர்க்களமாகியுள்ளது.

இது ஏதோ ஒரு நெடுவாசல் கிராமத்து மக்களின் பிரச்சினை என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் உள்ளே இறங்கி அவர்களுடன் இணைந்து போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழக மக்களின் கடமை..

காரணம், நாம் தினசரி தவறாமல் சாப்பிடுவது சோறு.. அதைத் தருபவன் விவசாயி.. ஒருபக்கம் வறட்சியால் இறக்கிறார்கள்.. மறுபக்கம் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உருவில் எமகாதரர்கள் கொன்றழிக்க காத்திருக்கிறார்கள்.

விவசாயத்தை நீர்த்துப் போகச் செய்து, வளமையை பொசுக்கி, சுடுகாடாக மாற்றும் அபாயகரமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலுமாக நெடுவாசலை விட்டுமல்ல ஒட்டுமொத்தமாக்க இந்த தமிழ் மண்ணை விட்டே விரட்டும் வரை அனைவரும் இணைந்து உறுதியான குரலில் போராட வேண்டும்..

போராட்டக் களத்தில் நிற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும், கிராமத்தவருக்கும் அனைவரும் தார்மீக ஆதரவை ஒருமித்து தர வேண்டும். அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் மூட்டப்பட்ட புரட்சித் தீ சென்னை மெரினா கடற்கரையில் அணைந்து போய்விடவில்லை என்பதை உரத்துச் சொல்வோம்!

உங்களது உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் எட்டட்டும்.. !

கேட்க வேண்டியவர்களின் காதுகளைப் போய் இடியென தட்டட்டும்.. !!

ஹைட்ரோகார்பன் திட்டம் புறமுதுகிட்டு ஓடட்டும்!!!

உங்களது உணர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

tamil.oneindia.com

TAGS: