மதுரை: புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து 14 நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதே போன்று, நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாகையில் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சீர்காழி அருகே உள்ள பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் எதிர்ப்பு
போராட்டங்களில் போது மாணவர்கள் ‘அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே’, ‘ரத்து செய் ரத்து செய் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினார்கள்.
போலீஸ் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சாலையில் இறங்கி போராடும் மாணவர்களை போலீசார் தமிழ்நாடு முழுவதும் கைது செய்து வருகின்றனர். நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்து உதைத்து போலீசார் இழுத்துச் சென்றனர். இதே போன்று தமிழகம் முழுவதும் போலீசார் மாணவர்களை கைது செய்கின்றனர்.