சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்லவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. ’தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஒரு பகுதியே அருணாசலப் பிரதேசம்’ என்பது அந்நாட்டின் வாதமாகும். அந்த மாநிலத்துக்கு இந்தியத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செல்வதை சீனா தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது.
தலாய் லாமாவுக்கு அழைப்பு: இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தருமாறு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு அந்த மாநில அரசு கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று அவர் அங்கு செல்வதற்கு மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது. அதற்கு சீனா ஆட்சேபமும், கவலையும் தெரிவித்திருந்தது.
அடுத்த மாதம் பயணம்: இந்நிலையில், தில்லியில் மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ’திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 முதல் 13-ஆம் தேதி வரை மதரீதியிலான பயணத்தை மேற்கொள்வார். மதச்சார்பற்ற ஜனநாயகம் என்ற முறையில் இந்த நாட்டின் எந்தப் பகுதிக்கும் அவர் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கப் போவதில்லை’ என்று தெரிவித்தனர்.
மேலும், ’தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளும்போது அவரை இந்திய அரசுப் பிரதிநிதிகள் சந்திப்பார்கள்’ என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பொது மேடையில் தலாய் லாமாவை அரசுப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருப்பது, மத்திய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பெய்ஜிங்கை கோபப்படுத்த இந்தியா தயங்கியது.
யார் இந்த தலாய் லாமா?
திபெத் புத்த மதத் தலைவர், தலாய் லாமா என்று அழைக்கப்படுகிறார். தலாய் லாமா என்பதற்கு ’திபெத்தின் குரு’ என்று பொருளாகும். அந்நாட்டின் ஆட்சி, அதிகாரத்திலும் தலாய் லாமா முக்கியப் பங்கு வகித்து வந்தார்.
இப்போதைய தலாய் லாமாவின் இயற்பெயர் டென்சின் கியோட்சோ; இவர் 14ஆவது தலாய் லாமா ஆவார். திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து தங்கள் பகுதியாக அறிவித்ததுடன், தலாய் லாமாவைக் கொல்லவும் முயற்சித்தது. இதையடுத்து, கடந்த 1959-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தார். ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் தங்கியிருக்கும் தலாய் லாமா, நாடு கடந்த திபெத் அரசின் தலைவராகவும் உள்ளார். இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
துணிச்சலான முடிவு
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
நமது அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இது. இந்தியா துணிச்சலாகவும் தீர்மானமாகவும் உள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள புத்த மடாலயத்திற்கு எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வருகை தரும் தலாய் லாமாவை நான் சந்திக்க உள்ளேன். அவர் அங்கு மதத் தலைவர் என்ற முறையில் செல்கிறார். அவரைத் தடுத்து நிறுத்த எந்தக் காரணமும் இல்லை. தலாய் லாமா அங்கு வர வேண்டும் என்று அவரது பக்தர்கள் கோரி வருகின்றனர். அவர் என்ன தீங்கிழைத்து விடுவார்? அவர் ஒரு துறவி என்றார் ரிஜிஜு.
சீனா கடும் எதிர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்வதற்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது என்ற தகவலால் சீனா பெரிதும் கவலையடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அவர் செல்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. சீன-இந்திய எல்லையில் கிழக்குப்பகுதி தொடர்பான தகராறு விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
தலாய் லாமா தலைமையிலான சிறிய குழுவினர், சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். எல்லை தொடர்பான அவர்களது நிலைப்பாடு சரியானதல்ல.
அமைதியை பாதிக்கும்: இந்த விவகாரத்தில் சீனா தனது கவலையை உரிய முறையில் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. தலாய் லாமா விவகாரத்தின் தீவிரத்தன்மை மற்றும் சீன-இந்திய எல்லைப் பிரச்னை ஆகியவை குறித்து இந்தியா முழுமையாக அறிந்துள்ளது. இந்தப் பின்னணியில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வருமாறு தலாய் லாமாவை இந்தியா அழைத்தால் அது எல்லைப்பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை பாதிப்பதோடு, இந்திய-சீன உறவுகளையும் பாதிக்கச் செய்து விடும் என்றார் அவர்.
-http://www.dinamani.com