சென்னை: மக்களின் வரிப்பணத்தில் அனைத்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்திய மீனவர்களின் அழுகுரல் கேட்கவில்லை போலும். அதான் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டப்பட்டு 15 மணி நேரங்களாகியும் பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து 40 ஆண்டுகளாகியும் இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. தமிழகத்தின் ராமேஸ்வரம், கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்தாலும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையான ஒன்றுதான்.
காலங்கள் மாறினாலும்… காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய தமிழக மீனவர்களின் பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை.
வாழ்வாதார பிரச்னை…
தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நாள்தோறும் கடலில் இறங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் பெரும்பாலும் இலங்கை அல்லது பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்படுவர். வாழ்வாதார பிரச்னையான இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ராமேஸ்வரம், நாகை மீனவர்களே.
துப்பாக்கிச் சூடு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இதுவரை 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிர்கள் பறி கொடுத்துள்ளனர். இச்சம்பவங்களின்போது இழப்பீடு, கண்டனம் அத்தோடு இந்த பிரச்னையின் சூடு தணிந்து விடும்.
6 ஆண்டுகளுக்கு பிறகு…
கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எச்சரிக்கை ஏதும் அளிக்காமல் இலங்கை ராணுவம் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரி்ட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் காயமடைந்தார்.
வாய் திறக்காத மத்திய அரசு
இந்த சம்பவத்தால் தங்கச்சிமடத்தில் தர்னா போராட்டம் ஈடுபட்டு வருகிறது… மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது… எனினும் இதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டிவிட்டரில்..
ரயில் விபத்து, சாலை விபத்து, பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் பிரதமர் மோடியும், வெளிநாட்டில் நடக்கும் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிப்பர்.
இந்தியர்கள் இல்லையா?
ஆனால் பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது. சுமார் 15 மணி நேரமாகியும் டிவிட்டரில் மோடி எவ்வித கண்டனத்தையும் பதிவு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
அமெரி்க்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்த புகைப்படங்களையும், அதிபர்களையும், தலைவர்களையும , அரசர்களையும் சந்தித்தற்கான சாராம்சத்தையும் டிவிட்டரில் அவ்வப்போது மோடி பகிர்ந்து கொள்வார். ஆனால் மீனவர் படுகொலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றாலும் ஒரு வருத்தம்கூட தெரிவிக்காதது ஏன்?. மீனவர்களின் அழுகுரல் மோடிக்கு கேட்கவில்லையா?
மௌனம் ஏன் ?
மோடியின் டிவிட்டர் பக்கத்தில் கடந்த 14 மணி நேரமாக இதுகுறித்து எந்த டிவீட்டுகளும் செய்ய வில்லை. தமிழ் பேசுவதால் இந்தியர்கள் இல்லை என்று மோடி கருதுகிறாரா? பாகிஸ்தான், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
தேர்தலிலேயே குறி
6 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவும், தக்கவைத்து கொள்ளவும், மேடைக்கு மேடை தொண்டை வறண்டு போகும் அளவுக்கு பேசும் மோடி தற்போது வாய்திறக்காதது இலங்கை கடற்படையினரின் அட்டகாசங்களை ஆமோதிப்பது போல் உள்ளது.
இலங்கைத் தமிழர்கள்…
இலங்கை அதிபராக இருந்த ராஜபட்சவின் ஆட்சியின்போது, இலங்கைத் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தபோது மத்தியில் ஆண்ட முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழர்களையும் காக்கவில்லை. அதேபோல் நரேந்திர மோடியும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் அக்கறையின்றி செயல்படுகிறார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே கண்டனம் தெரிவித்தால் போதுமா? வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்தபோதும் இதே மௌன விரதத்தை கடைபிடித்தார் மோடி. இந்த மௌனங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பொன்னாரும், தமிழிசையும் விளக்குவார்களா?
தமிழினம் ஒன்றுபடவேண்டும் .இது தமிழினம் தன்மானத்ததோடு வாழ வழி வகுக்கும் .மோடிக்கு நம் வேதனைகள் உணர வழியில்லை . தன மக்களை கொன்றவனை பார்த்து ஒருவிரலைக்கூட நீட்டாத ஒரு மத்திய அரசாங்கத்த்தை இனி எக்காலத்திலும் நம்பி தமிழினம் வாழ முடியாது.
அன்று நம் உடன் பிறப்புகளை கொன்ற போது தமிழ் நாடும் ஒன்றும் செய்ய வில்லை– இதன் காரணம் தமிழ் நாட்டு தமிழர்கள் கையால் ஆகாதவர்கள் என்று சிங்களவன் இப்போது கொக்கரிக்கிறான் – இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் –நாம் தான் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி காழ்ப்புணர்ச்சி காரணம் நமக்குத்தான் மானம் ஈனம் அற்று இருக்கிறோமே– என்ன சொன்னாலும் ஏறாது.