கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கு தீர்வு.. நாகை மீனவர்களை சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

jayakumarநாகை: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகப்பட்டினத்தில் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார். மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார். அதையடுத்து, இலங்கை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாகை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் நாகை மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நாகப்பட்டினம்: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சனை தீர்வு கிடைக்கும். மீனவர்களுக்கு தமிழக அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். மேலும் இரு நாட்டுக்கு இடையிலான பிரச்சனைகளை மத்திய அரசு தான் பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oneindia.com

TAGS: