பிரிட்ஜோவைக் கொன்றது யார் தெரியுமா?

fishermen4-07பிரிட்ஜோவும் அவரது நண்பர்களும் மார்ச் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்கிறார்கள். இரவு 7 மணியளவில் கடலில் வலை விரித்து, தங்களுக்கான வாழ்வாதாரத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

வலையில் மீன் சிக்கியதா எனத் தெரியவில்லை. சரியாக, 10:05-க்கு இரண்டு பேர் வரக்கூடிய கடல் பைக்கில், இலங்கைக் கடற்படை வீரர்கள் இருவர் வந்து, இந்த மீனவர்களைப் பார்த்துச் செல்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மீனவர்களுக்கு அச்சம் தொற்றிக்கொள்கிறது.

இனி இங்கு இருப்பது ஆபத்து என வலையை எடுத்து வேறு இடத்துக்கு நகர முற்படுகிறார்கள். அவர்கள் வலையைக் கத்தரித்துக்கொண்டிருக்கும் சமயம் 10:15 மணிக்கு இலங்கைக் கடற்படை வீரர்கள் மீண்டும் வருகிறார்கள்.

இப்போது அவர்கள் கையில் ஆயுதம் இருக்கிறது. கொஞ்சமும் தாமதிக்காமல், மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார்கள். எல்லாம் ஐந்தே நிமிடங்கள்தான். பின்னர் கடலில் ஒரு பேரமைதி நிலவுகிறது.

பொருள்தான் சேதம். இந்த முறை உயிர் சேதம் ஏதும் இல்லை என அவர்கள் அவதானித்துக்கொண்டிருக்க, ஒரு படகிலிருந்து மட்டும் ஈனஸ்வரத்தில் முனகல் சத்தம் கேட்கிறது. அங்கே, பிரிட்ஜோவின் கழுத்துப் பகுதியில் இலங்கைப் படையினரின் குண்டு இறங்கியிருக்கிறது.

பிரிட்ஜோவுடன் கடலுக்குச் சென்றிருந்த அவரது சித்தப்பா டிட்டோ, பதற்றத்துடன் மீனவர் சங்கச் செயலாளர் ஜேசுராஜாவைத் தொலைபேசியில் அழைக்கிறார். அப்போது மணி 10:20. ஜேசுராஜா தொலைபேசியை எடுக்கவில்லை. மீண்டும் ஐந்து நிமிட இடைவேளையில் 10:25-க்கு மறுபடியும் அழைக்கிறார்.

இந்த முறை தொலைபேசியை எடுத்த ஜேசு, தகவலைக் கேட்டுப் பதறி, இந்தியக் கடலோரக் காவல் படையை 10:30-க்கு அழைக்கிறார். அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. நேரம் கடத்தாமல், மீன்வளத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசிய சேசு, விஷயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் 10:40-க்குக் கடலோரக் காவல் படையை அழைக்கிறார்.

அப்போது, தொலைபேசியை எடுத்த அதிகாரிகள் நிதானமாக விஷயத்தைக் கேட்டுக்கொண்டு, ‘‘இதோ வருகிறோம்’’ என்று உறுதி கொடுக்கிறார்கள். உடனடியாக டிட்டோவை அழைத்த ஜேசு, ‘‘நம் கடற்படை வீரர்களுக்குத் தகவல் சொல்லியாகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள். எதற்கும் அஞ்சாதீர்கள்’’ என்கிறார் நம்பிக்கையாக.

ஆனால், நேரம் செல்கிறது… நேரம் செல்கிறது… கடற்படை வீரர்களின் படகு, கடலுக்குள் புறப்படவே இல்லை. நடுக்கடலுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரிட்ஜோ, “குறுக்கு வலிக்கிறது…” என்று வலி தாளாமல் துடிக்கிறான். குண்டு அடிபட்ட கழுத்துப் பகுதியிலிருந்து இரத்தப்போக்கும் அதிகமாகிக் கொண்டேபோகிறது.

11:20-க்கு பிரிட்ஜோ உடலில் எந்த அசைவும் இல்லை. கடல் காற்றோடு கலந்துபோனது அவனது உயிர். பிரிட்ஜோவின் உயிரற்ற உடல், 12:15 மணிக்கு கரைக்கு எடுத்து வரப்படுகிறது. அப்போதும், ‘இந்தியக் கடற்படை வீரர்கள்’ என்ன ஆனது என எட்டிகூடப் பார்க்கவில்லை.

நடந்த சம்பவங்கள் ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கிறார்கள் தங்கச்சிமடம் மீனவர்கள்.“நம் மீனவனை யார் கொன்றான் எனப் புரிந்துகொள்வது..? சுட்ட இலங்கைக் கடற்படையா? இல்லை… உதவிக்கு அழைத்தும் வராத எம் தேசத்தின் கடற்படையா?

நிச்சயம் பிரிட்ஜோவைக் கொன்றது இந்தியக் கடற்படைதான்.

அவர்கள் மட்டும், நாங்கள் அழைத்த நேரத்துக்கு விரைவாக வந்திருந்தால், நிச்சயம் எம் மீனவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவர்களுக்கு எங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை” என்கிறார் விசைப்படகு மீனவர் சங்கச் செயலாளர் ஜேசுராஜா வேதனையுடன்.

கச்சதீவு விவகாரத்தையும் பிரிட்ஜோவின் படுகொலைக்குக் காரணமாகச் சொல்கிறார்கள். எப்போதெல்லாம் கச்சதீவு தொடர்பான உரிமைக்குரல் தமிழகத்தில் எழுகிறதோ… அதை இராஜதந்திரரீதியாக அடக்கி ஒடுக்க இலங்கை அரசு சில முடிவுகளை எடுக்கும். அந்த முடிவின் இன்னொரு பலிதான் பிரிட்ஜோ என்றவர்கள், அதற்கான விளக்கத்தையும் தருகிறார்கள்.

இப்போது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் கச்சதீவுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அந்தோனியார் திருவிழா மட்டும்தான். அங்குதான் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களும் சந்தித்துக்கொள்கிறார்கள். இதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் அந்தோனியார் திருவிழா நெருங்கும் சமயத்தில், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறது இலங்கைக் கடற்படை.

பிரிட்ஜோ படுகொலை சோகத்தில், தமிழ் மீனவர்களும் விழாவைப் புறக்கணித்து விட்டார்கள். இதைத்தான் இலங்கை அரசும் விரும்பியது என்கிறார்கள் தங்கச்சிமடம் மீனவர்கள்.

கலாம் மட்டும் இந்தத் தீவின் அடையாளம் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆயிரக்கணக்கான பிரிட்ஜோக்களும்தான் இராமேஸ்வரத்தின் முகம். ஆனால், அந்த முகம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

அதனால்தான் மீனவன் செத்தால் பொதுச் சமூகத்தின் மனம் கொதிப்பதில்லை என்கிறார் மீனவர் சங்கப் பிரதிநிதி எமரிட்.

ஏறத்தாழ 850 விசைப்படகுகள் இராமேஸ்வரம் தீவில் இருக்கின்றன. ஒரு படகுக்கு, குறைந்தது 250 லிட்டர் டீசல் என வைத்துக்கொண்டால்கூட, ஒவ்வொரு முறை படகுகளை எடுக்கும்போதும் ஏறத்தாழ ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய்க்கு நம் மீனவர்கள் டீசல் போடுகிறார்கள்.

இதனால் வரும் வரி வருவாய் எவ்வளவு? அதேபோல் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மீன்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் வரும் அந்நியச் செலாவணி எவ்வளவு?

இரத்தமும் சதையுமான மனிதனாகக்கூடக் கருத்தில்கொள்ள வேண்டாம். எங்களால் இவ்வளவு வருவாய் வருகிறது தானே? குறைந்தபட்சம் அதற்காகவாவது எங்களைக் காக்கலாம்தானே? என்று நம் மீனவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.

உங்கள் படகை விடுவிக்க வேண்டாம்’ என்று சொல்வதே இலங்கைத் தமிழ் மீனவர்கள் தான். ‘நீங்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறீர்கள். நவீனமுறையில் விசைப்படகுகளைப் பயன்படுத்தி அனைத்து மீன்களையும் அள்ளி வந்து விடுகிறீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே என்ற கேள்வியை நாம் முன்வைத்தால் மீனவர்கள், எங்கள் கைகளில் விசைப் படகுகளைத் திணித்தது யார்? 60-கள் வரை நாங்களும் மரபார்ந்த மீன்பிடித் தொழில்தானே செய்து வந்தோம். எங்கள் வளர்ச்சி, வளம் என்ற பெயரில் இந்திய அரசு தானே நவீனப் படகுகளையும் வலைகளையும் கொடுத்தது? இப்போது எங்கள் மீது குற்றம் சொன்னால், எப்படிச் சரியாகும்?” என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். கடற்கரையிலிருந்து மூன்று நாட்டிக்கல் தூரம் நாட்டுப்படகுகளுக்கானது. ஏழு நாட்டிக்கல் வரை பாறை. பன்னிரண்டு நாட்டிக்கல் வரைதான் நம் எல்லை. அதாவது ஏழு நாட்டிக்கல்லுக்கும் பன்னிரண்டு நாட்டிக்கல்லுக்கும் இடையில் உள்ள ஐந்து நாட்டிக்கல்லில்தான் 850 விசைப்படகுகளும் மீன்பிடிக்க வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும்?

காற்றின் திசையில், நீரோட்டத்தில் படகுகள் நகர்ந்து எல்லை மீறுவது இயல்புதானே? இதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? சிங்கள மீனவர்கள் 1,000 நாட்டிக்கல் எல்லை மீறி குஜராத் வரை மீன்பிடிக்க வந்து, கண்டித்துத் திருப்பி அனுப்பப் படுகிறார்களே… இதற்கு என்ன சொல்வது?

இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டே இரண்டு நாட்டு தமிழ் மீனவர்களுக்கும் இடையில், சண்டையை மூட்டி விடுகிறது” என்று சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள்.

இதனால் இந்திய அரசுக்கு என்ன லாபம்?’ என்ற கேள்விக்கு, மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டையும், அதற்கு அரசின் மெளனத்தையும் ஏதோ நாங்கள் இலங்கை அரசுக்கும் தமிழ் மீனவனுக்குமான பிரச்னையாக மட்டும் பார்க்கவில்லை. இந்தியப் பெருங்கடல், தமிழ் மீனவர்களின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. அதிலிருந்து மீனவனை அப்புறப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதிதான் தொடரும் மீனவப் படுகொலைகள்.

மீனவன் மனதில் அச்சத்தை விதைத்து கடலை அவனுக்கு அந்நியமாக்கி, அவனை அகதிகளாக நகரத்துக்குள் துரத்தி, இந்தச் செழிப்பான மீன்வளத்தை அப்படியே பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கத் திட்டமிடுகிறது இந்திய அரசு. அந்தத் திட்டத்தின் பலிகள்தான் எண்ணூற்றி சொச்சம் மீனவர்கள்.

ஆனால், மீனவக் குடிகளுக்கு கடல்தான் எல்லாம் என்பது அரசுக்குப் புரிவதில்லை. கடலின் நீலத்தை, அதன் உப்பு வாடையை நுரையீரலுக்குள் நிரப்பாமல் மீனவனால் ஒருநாள்கூட வாழ முடியாது. அதனால்தான், சாவு காத்திருக்கிறது எனத் தெரிந்தும் மீனவன் கடலுக்குள் செல்கிறான்.

கடைசி மீனவன் இருக்கும் வரை மீனவன் கடலை விட மாட்டான்; கடலும் மீனவனைக் கைவிடாது’’ என்கிறார்கள் மீனவர்கள்.

அரசுகளைத்தான் மீனவன் நம்புவதில்லை… கடலை எப்போதும் நம்புகிறான்!

– Vikatan

TAGS: