பெற்றோரை இழிவாக பேசும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி

indianparentsடெல்லி: பெற்றோர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயமானது பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக தீர்ப்பளித்தது. அந்த உத்தரவில். போலீஸ் அதிகாரி மற்றும் சகோதரர்களுக்கு பெற்றோரின் சொத்துக்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரியும் அவரது சகோதரரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் அளித்த தீர்ப்பு:

வயதான பெற்றோர்கள் வாழும் வீட்டில், அவர்களுடன் வசித்து வரும் பிள்ளைகள் தரக்குறைவாக இழிவுபடுத்தி விமர்சித்தால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம். மூத்த குடிமக்கள் அமைதியாகவும் , பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெற்றோரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைபடுத்தும் பிள்ளைகளை, வாடகை வீட்டில் இருந்தாலும் சரி அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி அவர்களை வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்வு மற்றும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு நல்ல செயல் திட்டத்தை வடிவமைத்து, ஏற்கனவே உள்ள சட்ட விதிகளில் திருத்தம் செய்ய டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி மன்மோகன் உத்தரவிட்டார்.

tamil.oneindia.com

TAGS: