தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர்களை வகுப்பறைக்குள் சிறைவைத்து அவர்கள் தேர்வு எழுதவும் தடை விதித்த நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டணம் செலுத்தாததால் 19 மாணவ, மாணவியர்கள் சிறை வைப்பு – தேர்வு எழுதவும் தடை ஐதராபாத்: தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்துக்கு உட்பட்ட ஹயாத்நகர் பகுதியில் சரிதா வித்யாநிகேதன் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகளில் சிலர் கட்டணம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர்.
இதனால் நிர்வாகம் ‘பீஸ்’ கட்டாத 19 மாணவ – மாணவிகளை பள்ளி அறையில் பூட்டி சிறை வைத்து உள்ளனர். மேலும் அவர்களை தேர்வு எழுதவும் பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. நேற்று அந்த பள்ளியில் தேர்வு நடந்த போது கட்டணம் செலுத்தாத 19 பேருக்கும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி அறியவந்த பெற்றோர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும்,
பத்திரிகையாளர்களும் அங்கு விரைந்தனர். போலீசை பார்த்த பிறகு மாணவ – மாணவிகள் பூட்டி இருந்த அறை திறந்து விடப்பட்டது. 2 மணி நேரம் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பிள்ளைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-http://www.athirvu.com