விவசாயிகள்,மீனவர்களின் போராட்டங்களை பொன்.ராதாகிருஷ்ணனை வைத்து வலுகட்டாயமாக முடித்து வைக்கும் பாஜக

pon-radhakrishnanடெல்லி: விவசாயிகள், மீனவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தும் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில உறுதி மொழிகளை கொடுத்து வலுக்கட்டாயமாக போராட்டத்தை வாபஸ் பெற வைப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

நெடுவாசல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 22 நாட்களாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு எடுக்க வேண்டாம் என்ற கருத்து உள்ளது. நெடுவாசலில் நேரில் பார்த்த பிறகுதான் அதன் செழிப்பு புரிந்தது என்று தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய வார்த்தையை நம்ப வேண்டும் என்றும் தான் பொய் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். பொன். ராதாகிருஷ்ணனின் உறுதியை ஏற்ற கிராம மக்கள் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

ஆனால் லோக்சபாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று கூறுகிறார். மேலும், எரிவாயு கிணறு அமைப்பதால் புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறினார். ஹைட்ரோ கார்பன் குறித்து அவர் பேசியுள்ளது நெடுவாசல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மீனவர்கள் போராட்டம்

தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயதான மீனவர் சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கையிடம் உள்ள, 138 படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமரிடம் அறிக்கை அளித்து, குறுகிய நாட்களுக்குள் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதற்கு மீனவர்கள் சம்மதித்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு வாராமாக பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்யாமல் மீனவ மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போதெல்லாம் அப்போதெல்லாம் வாய் திறக்கமால் இருந்த வெளியுறவுத் துறை அமைச்சர சுஷ்மா சுவராஜ், 10 நாட்களுக்கு பின்பு இலங்கை அரசை கண்டித்திருக்கிறோம் எனக் கூறுகிறார்.

விவசாயிகள் போராட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய விவசாயிகளை, நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, மத்திய அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

இப்படி விவசாயிகள், மீனவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தும் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில உறுதி மொழிகளை கொடுத்து வலுக்கட்டாயமாக போராட்டத்தை வாபஸ் பெற வைப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேறியதா என்று பார்த்தால் எல்லாம் வெற்று உறுதிமொழியாகவே இருக்கிறது என்கின்றனர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

tamil.oneindia.com

TAGS: