ராமர் கோயில் கட்டுவதை முஸ்லீம்கள் ஆதரிக்க வேண்டும்: சு.சுவாமி கோரிக்கை

subramanian-swamyலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்ரமணியன் சுவாமி பேசுகையில், “கோயில் இடிக்கப்பட்ட பின்னரே அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்து மதத்தினர் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினை இணக்கமாக முடிந்தால் நல்லது. இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் போது ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்றுவோம்.

மதுரா, காசி மற்றும் அயோத்தியில் உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் இருந்து மட்டும் முஸ்லீம்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். 2024-க்குள் அந்த இடங்கள் விடுவிக்கப்படும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

tamil.oneindia.com

TAGS: