கீழடி ஆய்வை காலி செய்ய மத்திய அரசு சதி?..3ம் கட்ட ஆய்வுக்கு நிதி கேட்ட அமர்நாத் அசாமுக்கு மாற்றம்!

keezhadi-village

மதுரை: கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன.

மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தம்

இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர்.

3ம் கட்ட ஆய்வு

இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.

அமர்நாத் அசாமிற்கு மாற்றம்

இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

ஆய்வில் தொய்வு

அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்து யார் இந்த பொறுப்பிற்கு வருவார்கள் என்பதும் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் இதே உணர்வோடு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: