கர்நாடகத்திற்கு 39%… ஆந்திராவிற்கு 33%… தமிழகத்திற்கு மட்டும் ஏன் 3.24% நிவாரணம்: ராமதாஸ் கேள்வி

ramadasசென்னை: வறட்சி நிவாரணத் தொகையில் மிகவும் குறைந்த அளவிற்கு ஒதுக்கி மத்திய அரசு தமிழத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக ரூ.2014.45 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 விழுக்காட்டை மட்டும் நிவாரணமாக ஒதுக்கியிருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது.

இந்தியாவில் 2016-17ஆம் ஆண்டில் மிகக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது தமிழகம் தான். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வறட்சியால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்துள்ளனர். வறட்சியின் பாதிப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சுமார் 300 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

ராஜ்ய சபாவில்…

இதுபற்றி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மக்களவையில் விரிவாக பேசியதுடன், தமிழகத்திற்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதனால் தமிழக உழவர்களின் துயரைத் துடைக்கும் அளவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள நிதி ஏமாற்றமளிக்கிறது.

சொற்பத் தொகை

வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக ரூ.39,565 கோடி, வர்தா புயல் பாதிப்புகளை சரி செய்வதற்காக ரூ.22,573 கோடி என மொத்தம் ரூ.62,138 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசோ வறட்சி நிவாரணத்திற்கு ரூ.1748 கோடி, வர்தா புயலுக்கு ரூ.266 கோடி என மொத்தம் ரூ.2014 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.

தமிழகத்திற்கு துரோகம்

இது தமிழக அரசு கோரியுள்ள நிதியில் வெறும் வெறும் 3.24 விழுக்காடு மட்டும் தான். வறட்சியை சமாளிக்க ஒரு மாநிலம் கோரிய நிதியில் வெறும் 3.24 விழுக்காட்டை மட்டும் ஒதுக்கீடு செய்வது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் மட்டுமின்றி, மிகப்பெரிய அவமானமும் ஆகும். வறட்சி நிவாரணம் வழங்கும் விஷயத்தில் தமிழகத்திற்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப் படுவதாக தோன்றுகிறது. தமிழகத்துடன் ஒப்பிடும்போது மற்ற மாநிலங்களில் வறட்சியின் தாக்கமும், வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளும் மிகவும் குறைவாகும். ஆனாலும் அந்த மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகத்திற்கு 39%

உதாரணமாக, காவிரியில் கிடைத்த நீரில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான நீரை பயன்படுத்தி கர்நாடகத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அம்மாநிலம் ரூ.4702 கோடி நிவாரணம் கோரிய நிலையில், ரூ.1782 கோடி அதாவது 39% நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆந்திராவிற்கு 33%

அதேபோல், ஆந்திர அரசு ரூ.1500 கோடி நிவாரணம் கோரிய நிலையில், அதில் மூன்றில் ஒருபங்கை விட அதிகமாக ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு 39%, ஆந்திரத்துக்கு 33% நிவாரணம் வழங்கிய மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் 3.24% நிவாரணம் வழங்குகிறது என்றால் அது தமிழகத்தின் மீது காட்டப்படும் ஓரவஞ்சனை என்பதைத் தவிர வேறென்ன?

50 எம்பிக்களின் வேலை

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கான நிவாரணமாக மாநில அரசு ரூ.2247 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால், அந்த அளவுக்கு கூட மத்திய அரசு நிவாரண நிதி வழங்காததை ஏற்க முடியாது. தமிழகத்திற்கான நிவாரண நிதியை கேட்டுப் பெறும் விஷயத்தில் தமிழக அரசும் கடமை தவறி விட்டது. தமிழக ஆளுங்கட்சி சார்பில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

சின்னம் பெறவே…

ஆனால், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சின்னம் வாங்குவதற்காக தேர்தல் ஆணையத்திற்கும், புகார் மனு அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் அலைவதில் காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட வறட்சி நிவாரணம் பெறுவதில் காட்டவில்லை என்பது தான் உண்மை.

அழுத்தம் கொடுக்க…

தமிழகத்தில் வறட்சியால் மிக மோசமான அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.25,000 கோடியும், வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ.10,000 கோடியும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் அலட்சியம் காட்டாமல் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தி தமிழகத்திற்கான நிவாரண நிதியை பெற்று வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: