சென்னை: மக்கள் போராட்டங்களின்போது மட்டும் ரஜினி வாய்ஸ் எங்கே போகிறது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும், கங்கை அமரன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், தான் எந்த கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு கொடுக்கப்போவதில்லை என்று ரஜினி டிவிட்டரில் கூறியிருந்தார்.
ரஜினியின் வாய்ஸ் இப்போதெல்லாம் எடுபடுவதில்லை என நெட்டிசன்களும் அவரை ஓட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ரஜினி பற்றி டிவிட்டரில் இன்று விளாசித் தள்ளியுள்ளார்.
மண்டை ஓடுகள்
தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளோடு டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.எது தடுக்கிறது?
லைக்கா சர்ச்சை
நடிகராக மட்டுமில்லை. இலங்கைதமிழர் வரை அதுவும் லைக்கா (பின்னிருக்கும் பிஜேபி) ஆதரவோடு அரசியல் விளம்பரம் தேடினால் இக்கேள்வி எழவே செய்யும்.
மக்கள் போராட்டத்தின்போது
அரசியலில் ஈடுபடாத வேறு எந்த நடிகரும் தேர்தல்நேரத்தில் ‘வாய்ஸ்’ கொடுப்பதில்லை.மக்கள் போராட்டங்களின்போது மட்டும் அந்த ‘வாய்ஸ் எங்கே?
படம் ரிலீஸ் காலங்கள்
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள ஜோதிமணி, தேர்தல் காலங்கள் அல்லது பெரும்பாலும் அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில் மட்டும் ரஜினி வாய்ஸ் கொடுப்பது ஏன்? எல்லா பிரச்சினைகளுக்கும் வாய்ஸ் கொடுக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி.
மோடிக்கு பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு உத்தரவு வெளியான தினத்தில், புதிய இந்தியா பிறந்துள்ளது என்று, ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அப்போது தாக்கம் ஏற்படுத்தியது. இதனால் காங்கிரசில் பல தலைவர்கள் ரஜினிகாந்த் மீது அதிருப்தியிலுள்ளதாக கூறப்படும் பின்னணியில் ஜோதிமணியின் தாக்குதல் கவனிக்கத்தக்கதாக உள்ளது.