ராஜபக்‌சவுடன் ஏன் கைகொடுத்தீர்கள்! ஏன் சிரித்தீர்கள்! விளக்கமளிக்கிறார் திருமாவளவன்

thirumavalavanஇலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் ‘புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார்’ என்ற செய்திகள் கசியத் தொடங்கியதுமே, ‘ரஜினி இலங்கைக்குப் போகக்கூடாது’ என்ற முதல் எதிர்ப்புக் கோரிக்கையை வைத்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

இப்போது, ரஜினியே தான் போகவில்லை என்று அறிவித்துவிட்ட பிறகு, விவகாரம் வேறு திசைக்குத் திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில், திருமாவளவனைச் சந்தித்துப் பேசினோம்.

ரஜினி, இலங்கை செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளிவராத நிலையிலேயே, ‘ரஜினி, இலங்கை செல்லக்கூடாது’ என்று எந்த அடிப்படையில் எதிர்ப்புக்குரல் கொடுத்தீர்கள்?

இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்காக லைகா நிறுவனம் சார்பில், சுமார் 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் திறப்பு விழாவுக்காக ரஜினிகாந்த வரவிருப்பதாகவும் அங்குள்ள வடமாகாணத் தமிழ்த் தலைவர்கள் சிலர் என்னிடம் தகவல்கொடுத்தனர்.

மேலும், இப்போது உள்ள சூழ்நிலையில், ரஜினியின் வருகை வரவேற்கத் தக்கதாக இல்லை. எனவே, அவரை வரவேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள் என கோரிக்கையும் வைத்தனர். அதனை ஏற்று, ஊடகம் வாயிலாக நாங்களும் ‘ரஜினி, இலங்கை செல்லக்கூடாது’ எனக் கோரிக்கை வைத்தோம். அவரும், பெருந்தன்மையாக ‘செல்லவில்லை’ என அறிவித்திருக்கிறார். அதற்கு முதலில் ரஜினிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

வீடுகளை இழந்து, வாழ்விடங்களை இழந்து, சொந்தங்களை இழந்து என லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்போதும் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். சிங்கள அரசின் இந்த ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலை உலக நாடுகள் எல்லாம் கண்டித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படியொரு இக்கட்டான சூழலில், ரஜினிகாந்த் இலங்கைக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரேயானால், அது, தமிழ் மக்களின் பரிதவிப்புகளை எல்லாம் வெளியுலகுக்குத் தெரியாவண்ணம் புதைத்து விடுவதோடு, ‘சமதர்மம் மிக்க ஜனநாயக நாடு’ என்ற பெயரையும் இலங்கைக்கு வாங்கிக்கொடுத்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால்தான், அப்படியொரு கோரிக்கையை நாங்கள் வைத்தோம்.

சம்பந்தன் உள்ளிட்ட வடமாகாணத் தலைவர்களே, ரஜினிகாந்த் இலங்கை வருவதை வரவேற்கிறார்களே..?

சம்பந்தன் உள்ளிட்ட சில தமிழ்த் தலைவர்கள், ஆரம்பத்திலிருந்தே மைத்ரிபால அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்குள்ள பொதுமக்கள் மத்தியில், ‘இப்போதுள்ள சூழலில், ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்தார் என்றால், அது மைத்ரிபால சிறீசேனவின் ஆளும் அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கும்’ என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘இப்போதைய சூழலில்தான் ரஜினிகாந்த் வரவேண்டாம்’ என்கிறார்களே தவிர, எப்போதுமே வரவேண்டாம் என்று அவர்களும் சொல்லவில்லை; நாங்களும் சொல்லவில்லை.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு சிறு அளவிலான உதவியும்கூட பெரிய நிவாரணமாக இருக்கும் என்று ஈழ மக்களே கூறிவரும் வேளையில், இதுபோன்ற போராட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் ஒரு பின்னடைவாகத்தானே இருக்கும்?

லைக்கா நிறுவனம் 150 வீடுகளைக் கட்டவில்லை. வெறும் 50 வீடுகளைத்தான் கட்டியிருக்கின்றன. மீதம் உள்ள 102 வீடுகள் இந்திய அரசு கொடுத்திருந்த நிவாரணத் தொகையைக்கொண்டு கட்டப்பட்டது. அதாவது, சிங்கள அரசாங்கத்தின் ஒப்பந்தப் பணியை எடுத்துத்தான் லைகா நிறுவனம் இந்த வீடுகளைக் கட்டியிருக்கிறது.

இதுபோன்று, புதிய வீடுகளைக் கட்டி திறப்புவிழா நடத்துவதென்பது அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், இப்போது ரஜினியை ஏன் அழைத்து திறப்பு விழா நடத்த வேண்டும் என்று லைகா நிறுவனம் ஏன் விரும்புகிறது என்றால், அவரை ஹீரோவாக வைத்து, ‘2.0’ என்ற திரைப்படத்தை அந்நிறுவனம்தான் எடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்துகொண்டால், ‘2.0’ படத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து, லாபம் ஈட்ட முடியும் என்று லைகா நிறுவனம் நினைக்கிறது. கூடவே, மைத்ரிபால சிறீசேனஅரசும் தமிழர்களுக்கு நல்லது செய்து வருகிறது என்ற பொய்யான செய்தியும் உலக அரங்கில் பரப்பப்படும் வாய்ப்பு உண்டாகி விடும்.

ஆக, வணிக அரசியல் உள் நோக்கங்கள் கொண்டதாலேயே இவ்விஷயத்தில் எங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். ரஜினிகாந்த் போகாததாலேயே தமிழர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் விட்டு விடப்படும் என்ற சூழல் கிடையாது. ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயிரக்கணக்கான கோடிகளை இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ளது.

ஆனால், அதில் 15 சதவிகிதப் பணத்தைக்கூட சிங்கள அரசு தமிழ் மக்களின் நலனுக்காகச் செலவிடவில்லை. இந்தியா கொடுத்த 1000 டிராக்டர்களில் 80 சதவிகித டிராக்டர்களை சிங்களவர்களுக்குத்தான் கொடுத்துள்ளது. தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உதவிகள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமே தவிர, உதவிகள் கிடைக்கக்கூடாது என்று தடுப்பதல்ல எங்கள் நோக்கம்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை சென்று, ராஜபக்‌ஷேவுடன் விருந்து உண்டுவந்த திருமா, தற்போது ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்று சொல்லலாமா?’ என வலைதளங்களில் உங்களுக்கு எதிரான கேள்விகள் எழுப்பப்படுகிறதே?

அது மத்திய அரசு அமைத்த ஒரு குழு. அதில் என்னையும் சேருங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், என் பெயரும் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர்தான், எனக்கே தெரியவந்தது. அப்போதும்கூட, நான் போகவிரும்பவில்லை என்றுதான் என் கட்சியினரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், ‘பாதிக்கப்பட்ட நம் தமிழ்ச் சொந்தங்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத்தான் நாம் போகிறோம். அதனால், மறுக்காமல் போய்வாருங்கள்’ என்றுதான் சொல்லியனுப்பினார்கள்.

போகிற 10 பேர்களில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத்தான் போகிறேன்’ என்று சொல்லித்தான் நானும் சென்றேன்.அங்கே சென்றபிறகு, ராஜபக்‌சவுடன் ஏன் கைகொடுத்தீர்கள்? அவர்கள் கமென்ட் அடிக்கும்போது ஏன் சிரித்தீர்கள்? என்றெல்லாம் என்னைக் கேள்வி கேட்கிறார்கள்.

அவை நாகரீகம் என்ற ஒன்று இருக்கிறது. எவ்வளவுதான் நமக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும், அவை நாகரீகத்தை மீறி எதுவும் செய்துவிட முடியாது. அப்போதும்கூட, ‘இவர் பிரபாகரனின் ஆள். பிரபாகரன் இருந்தபோது இவர் வந்திருந்தால், இவரும் மேலோகம் போயிருப்பார்’ என்றுதான் என்னை கமென்ட் அடித்தார் ராஜபக்‌ஷே.

அந்த இடத்தில், ‘எப்படிடா என்னை நீ இப்படிச் சொல்லமுடியும்?’ என்று நான் சண்டைக்கா போகமுடியும்? இதுமட்டுமல்ல… வெளிவிவகாரத்துறை அமைச்சர் எங்களுக்கு ஆளுக்கு ஒரு டீத்தூள் பொட்டலத்தைப் பரிசாகத் தந்தார்.

எல்லோரும் அதை வாங்கினோமே தவிர, யாரும் இங்கே கொண்டு வரவில்லை; அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம். ஆனால், இங்கே உள்ள காழ்ப்பு உணர்ச்சி கொண்டவர்கள்தான் இப்படியெல்லாம் எங்களுக்கு எதிராக செய்திகளைப் பரப்புகிறார்கள்.

– Vikatan

TAGS: