விவசாயிகளுக்காக மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!!

marina-protest4545சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி இதுவரை நேரில் சந்திக்கவில்லை.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இன்றும் பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இன்றும் சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடலில் இறங்கி போராட்டம்

ஆனால் போலீசாரின் தடையையும் தாண்டி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டனர். அவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுக்குள் இறங்கிய போலீஸ்

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீனவர்களை பாதுகாக்க கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். கடலில் இறங்கிய இந்த மாணவர்களை கைது செய்ய போலீசாரும் கடலில் இறங்கினர்.

கடலின் உள்பகுதிக்கு சென்ற மாணவர்கள்

ஆனால் போலீசார் நெருங்க நெருங்க… மாணவர்கள் கடலின் உள் பகுதிக்குள் செல்ல தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் செய்வது அறியாமல் தவித்தனர்.

மாணவர்கள் கைது

மீண்டும் மீண்டும் போராடி கடலின் உள்பகுதிக்குச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சோறு போடும் விவசாயிகள் வாழ வேண்டும் என மாணவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மெரினாவில் அதிகாரிகள் ஆய்வு

மாணவர்கள் கடலுக்குள் இறங்கி நடத்திய போராட்டத்தால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்பகுதியில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

திருச்சியை தொடர்ந்து கோவையிலும் வெடித்தது மாணவர் போராட்டம்! விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்- கைது!!

திருச்சி: விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே திரண்ட மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையிலும் கைது

இதனிடையே கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்ட மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரைமணி நேரத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நுழைவு வாயில் மூடல்

கோவை வஉசி மைதானம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மைதானத்தின் நுழைவு வாயிலையும் போலீசார் இழுத்து மூடியுள்ளனர்.

தமுக்கத்திலும் போலீசார் குவிப்பு

மதுரையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என அஞ்சப்படுவதால் தமுக்கம் மைதானத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கூடுகிறார்களா என்பதையும் போலீசார் தீவிமாக கண்காணித்து வருகின்றனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டில்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திய அனைத்து இடங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு வளையத்தில் மெரினா

ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் போலீசார் திடீரென குவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரைக்கும் பரவிய மெரினா மாணவர் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்ட 50 மாணவர்கள் கைது

மதுரை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அருண் ஜேட்லியை சந்தித்தும் அவர்களது பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு நூதன போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் மெரினாவில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. எனினும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை தெப்பகுளம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

tamil.oneindia.com

TAGS: