தமிழக விவசாயிகளின் 20 நாள் போராட்டத்திற்கு பதில் என்ன? சென்னையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்

fastingசென்னை: டெல்லியில் தொடர்ந்து 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டம்

இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் காவிரி மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்கள்

இந்நிலையில், சென்னையில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினார்கள். இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள்

இவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினாவில் தொடர் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஒரு பிரிவினராவர். விவசாயிகள் பிரச்சனை குறித்த அனைத்து போராட்டங்களை தாங்கள் முன்னெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

கைது

முன்னதாக, அதே வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை இளைஞர் மற்றும் மாணவர்கள் குழு ஒன்று, விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். அவர்கள் மறுத்ததையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் திரைப்பட இயக்குநர் வ. கவுதமனும் கலந்து கொண்டு கைதானார்.

tamil.oneindia.com

TAGS: