டாஸ்மாக்கில் அலை மோதும் கூட்டம்… நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் ‘குடிமக்கள்’ அவதி

tasmac-shopசென்னை: நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும், சுமார் 3 ஆயிரத்து 400 கடைகள் செயல்பட்டு வந்தன.

மதுக்கடை மூடல்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவை அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. இதனால் குடிமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். டாஸ்மாக் கடைகள் எங்கு திறந்திருக்கின்றதோ அங்கு மது வாங்க குவிந்து வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர் குடி பிரியர்கள்.

போக்குவரத்து நெரிசல்

இருக்கும் சில கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் கூட்டம் அதிக அளவில் கூடியும் மதுபாட்டில்களை வாங்கப்படுவதால் அந்த இடத்தில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அப்பகுதியில் வசிப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், பெரிய அளவில் தமிழக அரசிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நெடுஞ்சாலைகள் அல்லாத பிற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு தேர்ந்தெடுக்கும் இடங்களில் வசிக்கும் பெண்கள் பெருமளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: