விவசாயிகள் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் – அரசியல் கட்சியினர் ஆதரவு

bandh3556சென்னை: டெல்லியில் கடந்த 20 தினங்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெறுகிறது.

விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. இந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அண்டை மாநிலங்கள் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பந்த்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவை தரும் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

பெருகும் ஆதரவு

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று வெள்ளையன் கூறினார். அதன்படி பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கறுப்புத்துணி கட்டி போராட்டம்

சேலம் உழவர் சந்தையில் முன்பு விவசாயிகள் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அஸ்தம் பட்டி, அம்மா பேட்டை, சூரமங்கலம் ஆகிய உழவர் சந்தை விவசாயிகள் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

அந்தந்த மாவட்டங்களில் ஆடு, மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் ரோட்டிலேயே சமையல் செய்து சாப்பிடும் போராட்டமும் நடத்த உள்ளனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் நடைபெறுவது விவசாயிகளுக்காக ஆதரவு அதிகரித்து வருவதை காட்டுகிறது.

tamil.oneindia.com

TAGS: