உ.பி.யில் 2.15 கோடி விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி: யோகி ஆதித்யநாத் அதிரடி

yogi-adityanathலக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2.15 கோடி விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

லக்னோவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஆய்வு நடத்திய ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் எந்த வித சமரசமும் கிடையாது என்று அவர் காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அரசு அலுவலகங்களில் வெற்றி பாக்குபோடுவது, பான் மசாலாக்கள் சுவைப்பது போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபட கூடாது எனவும் உத்தரவிட்டு அதிரடி காட்டினார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற 15 நாட்களுக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வளர்ச்சித் திட்டப் பணிகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக விவசாயிகளின் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த தள்ளுபடி பயிர்க் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தவிர, டிராக்டர் போன்ற வாகனங்களுக்கானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உ.பி. அரசிற்கு ரூ.36,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டி இருக்கும். இதற்கான உதவியை மத்திய அரசிடம் கேட்கப்பட்ட போது அது மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, தேசிய வங்கிகளில் தமிழக விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் 22 நாட்களாக நடத்தி வரும் போராட்டம் ஓர் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் எடுத்த முடிவுகள் குறித்து அவர் கூறுகையில், 2.15 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.30 ஆயிரத்து 729 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். இத்துடன், விவசாயிகளின் வாராக்கடன் ரூ.5630 கோடியையும் தள்ளுபடி செய்துள்ளோம். மொத்தம் உள்ள 2.30 கோடி விவசாயிகளில், 92.5 சதவீதம் அதாவது 2.15 கோடி பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர் என்றார்.

முன்னதாக உ.பி.யில் பாஜக ஆட்சி அமைத்தால் அதன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கட்டது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: