டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பெண்கள் போன்று சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலில் நம் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். நிர்வாணப் போராட்டம் கூட நடத்தியும் பயனில்லை. இந்நிலையில் நேற்று விவசாயிகள் சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர். அவர்கள் பொட்டை அழித்தபோது சக விவசாயிகள் கதறி அழுதனர்.
போராட்டத்தின்போது தஞ்சாவூரைச் சேர்ந்த வளப்பக்குடி வீரசங்கர் குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடந்தது. போராட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை சேர்ந்த பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்தினம் விவசாயிகள் சேலை அணிந்து தாலி கட்டி அதை அறுக்கும் போராட்டம் நடத்தினார்கள். நேற்றுடன் 34 நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.