குடியை விடு..படிக்க விடு: மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம் வகுப்பு சிறுவன்

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர்.

அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும் நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் குடியை விடு படிக்க விடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டான்.

அச்சிறுவன் கடை அமைந்திருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பதாகையை ஏந்தியபடி நடந்தே சென்றான்.

பள்ளிச் சீருடையுடன் சென்ற அந்தச் சிறுவன் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். மதுக்கடை அருகே சென்ற சிறுவனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடை மூடியிருப்பதை சுட்டிக் காட்டி ஆகாஷை பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னரே சிறுவன் பள்ளிக்குச் சென்றுள்ளான்.

-lankasri.com

TAGS: