சென்னை: தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கிணறுகள் அமைத்துள்ளது.
இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்மையாக கண்டித்துள்ளார்.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், பன்னூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஆறு ராட்சத கிணறுகளை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
துரோகம்
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசு நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நிராகரித்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு மறுத்து தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றது. கர்நாடக அரசின் அடாவடித் தனத்திற்கு மத்திய அரசும் துணையாய் நின்று தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது.
ராட்சத கிணறு
தற்போது சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், பன்னூர் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே ஆறு ராட்சத கிணறுகளை அமைத்து கிணற்றில் அடியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்திட திட்டமிட்டு செயல்பட்டு வருவது தமிழக அரசுக்கு தெரியுமா?
கண்டனம்
தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக் கூடாது என்கிற உள்நோக்கத்துடன் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக அரசின் இத்தகைய செயல் மிக வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். இது குறித்து தமிழக அரசு விசாரித்து தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு காவிரி பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகக் கவலைக்குரியது.
காவிரி பிரச்சனை
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைப்பதை தடுப்பதுடன், காவிரி பிரச்சனை முடிவிற்கு வராமல் காலம் கடத்தும் உள்நோக்கத்துடன் ஒற்றை தீர்ப்பாயம் அமைத்திட மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை கைவிடச் செய்யவும், கிணறுகள் வெட்டப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சிறிலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!