இம்பால்: மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா திருமண பந்தத்தில் நுழையவுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது நீண்ட கால காதலரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்யவுள்ளார். தமிழகத்தில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்குப் பின்னர் தமிழகத்திலேயே அவர் செட்டிலாகவுள்ளார்.
இரோம் ஷர்மிளா, இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்மான்ட் கோடின்ஹாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். திருமணத் தேதி முடிவாகவில்லை என்று கூறியுள்ள இரோம் ஷர்மிளா, ஜூலை மாதம் தமிழகத்தில் திருமணம் நடைபெறும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார் இரோம் ஷர்மிளா. தனது 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துக் கொண்ட இரோம் ஷர்மிளா, மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற கட்சியை தொடங்கினார். மணிப்பூர் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் மணிப்பூர் மக்கள் அவரை ஏற்கவில்லை.
தேர்தல் தோல்வியால் அரசியலை விட்டு ஒதுங்கி விட்ட இரோம் தற்போது தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் தனது திருமணத்தை தமிழகத்தில் வைத்து முடிக்க முடிவு செய்துள்ளார் இரோம். தனது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ள இரோம், அரசியல்வாதியாக அல்லாமல், சமூக போராளியாக தனது போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
திருமணத் திட்டம் குறித்து இரோம் கூறுகையில், திருமணத்திற்குப் பின்னர் தமிழகத்திலேயே செட்டிலாக திட்டமிட்டுள்ளோம். எனது காதலர் டெஸ்மான்ட் கோவாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் பின்னர் தான்ஸானியாவுக்கு இடம் பெயர்ந்தனர். அங்குதான் அவர் பிறந்தார். பின்னர் இங்கிலாந்து திரும்பினர். திருமணத்திற்காக டெஸ்மான்ட் வந்துள்ளார்.
எனது குடும்பத்திடம் இன்னும் திருமணத் திட்டத்தைத் தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிப்பேன் என்றார் அவர்.