ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய சாதனை கேரளாவின் கம்யூனிஸ்டுகளுடையது.
ஆனால் அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் இன்றுவரை மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தின் திமுகதான் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக மாநிலத்திலிருந்து வெளியேற்றியது.
மாநிலக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்பது தமிழகத்தில்தான் முதலில் சாத்தியமானது.
ஒற்றை ஆட்சிமுறை என்பதிலிருந்து ஓரளவுக்கு நகர்ந்து கூட்டாட்சி முறை என்பதை நோக்கி இந்தியா செல்ல திராவிடக் கட்சிகள் மிகப் பெரும் காரணமாக இருந்துள்ளன.
வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியா தனித்து நிற்கிறது என்றால், தென்னிந்தியாவிலுமே தமிழகம் தனித்து நிற்கிறது.
கட்சி அரசியலில் மட்டுமல்ல, கல்வி, பொருளாதார வளர்ச்சி, நகரமயமாதல், சமூகநீதி குறித்த அக்கறை, அவை சார்ந்த போராட்டங்கள், பெண்ணிய நலன் சார்ந்த மாற்றங்கள், சமூக நலன் சார்ந்த இலவசங்கள் போன்ற பலவற்றை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.
இவை பலவும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருந்துள்ளன.
சத்துணவுத் திட்டம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
நாடு முழுமைக்குமானதொரு திட்டமாக பின்னாள்களில்தான் இது விரிவானது.
சரியான நிதி ஒதுக்கீடு இன்றிக் கொண்டுவரப்பட்டாலும், ‘அம்மா உணவகம்’ இன்று பிற மாநில அரசுகளால் கவனிக்கப்பட்டு, நகல் எடுக்கப்படுவதைக் காண முடிகிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச அரிசி என்னும் மாபெரும் திட்டம், பசியை ஒட்டுமொத்தமாகப் போக்கியது; இன்றுவரை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இது நடைமுறைக்கு வரவில்லை.
கல்வி தமிழகத்தில் வளர்ந்த அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று சொல்லலாம்.
கல்வியின் தரம் குறித்து நமக்கு நிறையக் கேள்விகள் இருக்கலாம்.
ஆனால் அதனைத் தாண்டி, மாநிலத்தில் மூலை முடுக்கு எங்கும் பள்ளிகள் பரவியிருப்பதை நாம் காணமுடியும்.
தனியார் கல்வி நிலையங்கள் வேகமாகப் பரவும் மாநிலமும் தமிழகம்தான். 1980-களில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழகம் எங்கும் வரத் தொடங்கின.
இவற்றின் தரமும் சுமார்தான் என்றாலும், இவைதான் இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பப் பரவலுக்கு வித்திட்டன.
அமெரிக்காவில் கணினித் துறையில் வேலைக்குச் சென்றிருக்கும் இந்தியர்களில் தமிழர்களும் தெலுங்கர்களுமே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுடன் கடுமையான போட்டி இருந்தாலும் கணினிச் சேவை நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் தமிழகத்தில் பரவியிருப்பதைப் பார்க்கலாம்.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஆக்செஞ்சர், ஐபிஎம், காக்னிசண்ட் என இத்துறையின் முதன்மை நிறுவனம் எதுவானாலும் சென்னையில் தன்னை நிலைநாட்டாமல் இருக்க முடியாது.
ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் திகழ்கிறது.
‘சாதனைகள் வெற்றிடத்தில் நிகழவில்லை’
ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சி, நுகர்வு வளர்ச்சி என்று பார்க்கையில் சென்னை மட்டுமன்றி, கோவை, கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, சிவகாசி, மதுரை எனப் பலவும் மிக வேகமாக வளர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
இவை யாவும் அரசியல் வெற்றிடத்தில் நிகழ்ந்திருக்க முடியாது.
பிற மாநிலங்களைவிட வேகமாக நிகழ்ந்துள்ள இந்த வளர்ச்சிக்கு திமுகவையும் அதிமுகவையும் பாராட்டியே தீரவேண்டும்.
யதார்த்த அரசியல் சூழல்களை நன்கு புரிந்துகொண்டு, தம்முடைய தனிக்கொள்கைகளை விட்டுத்தராமல், மத்திய அரசுடன் சரியான உறவைப் பராமரித்து, நாடு முழுவதிலுமிருந்து முதலீடுகளைத் தம் மாநிலத்தை நோக்கி ஈர்த்துள்ளன திராவிடக் கட்சிகள்.
தலைமை இல்லாத வெற்றிடம்
குறைகள் இல்லாமல் இல்லை.
திமுக, அதிமுக இரண்டுமே கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற தனிப்பட்ட தலைவர்களின் ஈர்ப்புச் சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கியவை.
இன்று இவர்கள் இல்லாத நிலையில் இக்கட்சிகள் இரண்டுமே தடுமாறுகின்றன.
அண்டை மாநிலங்கள் தமிழகத்திடமிருந்து வளர்ச்சியைத் தம்மை நோக்கி இழுக்கின்றன.
அதில் வெற்றியும் பெற்றுள்ளன.
இன்று தெலங்கானாவோ ஆந்திரமோ மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக், அமேசான் போன்ற உலகின் மிகப்பெரும் கணினி நிறுவனங்களிடம் பேசி அவர்களைத் தங்கள் மாநிலங்களுக்கு அழைத்துவர முடியும். தமிழகத் தலைவர்கள் யாருக்குமே அதற்கான திறன் தற்போது இல்லை.
‘ஊழலும் வளர்ந்தது’
தமிழகத்தின் வளர்ச்சியுடன் ஊழல் இணைந்தே சென்றது.
இது அரசியல்வாதிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவானதாக இருந்தது.
ஆனால் இன்று ஊழல் மட்டுமே தொக்கி நிற்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் கியா என்ற தென்கொரிய வாகன நிறுவனம் தமிழகத்தை விடுத்து ஆந்திரம் சென்றிருப்பதன் பின்னணியில் இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.
தலைகுனிவு
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின்மீது கடந்த இருபதாண்டுகளில் எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், கைதுகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவை இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் என்று தமிழகத்தைத் தலைகுனியச் செய்துள்ளன.
தமிழகத்தின் சமூக நலத் திட்டங்களுக்குப் பின்னால் இருப்பது அரசே முன்னின்று நடத்தும் சாராய வியாபாரத்திலிருந்து கிடைக்கும் மாபெரும் வருமானம்.
கூடவே சாராயம், தமிழக அரசியல்வாதிகளுக்கும் எக்கச்சக்கமான வருமானத்தை அள்ளித் தருகிறது.
ஆனால் இன்று பல்வேறு வழக்குகளின் முடிவுகளும் பொதுமக்களுக்கு மதுக்கடைகள் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பும் சேர்ந்து சாராய வருமானத்தைப் பெருமளவு பாதித்துள்ளது.
அதேநேரம் இலவச அரிசி, அம்மா உணவகம் போன்றவற்றை உடனடியாகக் குறைக்கவோ, நீக்கவோ முடியாது. இது தமிழகத்தின் நிதிநிலையைக் கடுமையாக பாதிக்கும்.
மத்திய அரசின் வரிப் பங்கீடு, மக்கள் தொகையைக் குறைத்து வளர்ச்சியை அதிகரித்த தமிழகம் போன்ற மாநிலங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
மத்திய அரசுடன் தொடர்ந்து போராடாவிட்டால் அதிகம் வளராத வட மாநிலங்களுக்கே மத்திய நிதியில் அதிகப் பங்கு கிடைக்கும்.
திராவிடக் கட்சிகளுக்கு இது மிகப் பெரும் சவால்.
ஐபிஎல் வீரர் ஹாட்ரிக் எடுக்க உதவிய 12 வயது சிறுவனின் `டிப்ஸ்’
வளர்ந்த பிற மாநிலங்களையும் தம்முடன் சேர்த்து அணி திரட்டிப் போராடினால்தான் இதில் வெற்றி சாத்தியம்.
ஆனால் திராவிடக் கட்சிகள் பிற மாநிலங்களைத் தம்முடன் சேர்த்துச் செல்வதில் வெற்றி பெற்றதே இல்லை.
இலங்கைப் பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்றவை உதாரணங்கள்.
தமிழகம் பெரும் சவால்களைத் தற்போது சந்தித்து வருகிறது. ஒரு பெரும் வெற்றிடம் அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவர்கள் யாரும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தென்படவில்லை.
வளர்ச்சிக்கு சவால்!
இதுவரையில் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை அப்படியே தக்கவைத்து நீட்டிக்க தமிழகத்தால் முடியுமா என்று தெரியவில்லை.
இந்தியாவிலேயே மோசமான நீர் வளம் கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம்தான்.
காட்டு வளத்தை மிகக் கடுமையான முறையில் அழித்திருக்கும் மாநிலமும் தமிழகம்தான்.
கிரானைட், கடல் மண், ஆற்று மண் ஆகியவற்றை வரைமுறையின்றி வெட்டியெடுத்து மிக மோசமாக சுற்றுச் சூழலைப் பாதிக்கும் செயல்களைச் செய்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.
கல்வி நிலையங்கள் பல இருந்தாலும் கல்வித் தரத்தை முன்னேற்றாவிட்டால் மேலும் மேலும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல தமிழகம் தடுமாறும்.
மக்களுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அண்டை மாநிலங்களுடன் அல்ல நம்முடைய போட்டி. நம் மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள முடியுமா என்பதுதான் நம்முடைய இன்றைய சவால். சிங்கப்பூர், தைவான், தென்கொரியா போல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டிய ஒரு மாநிலமான தமிழகம், கீழ்நோக்கிச் சென்றுவிடுமோ என்ற பயத்தைத் தற்போது அளிக்கிறது.
இதுதான் தமிழகத்தின் முன் உள்ள சவால். இதனை திராவிடக் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் அந்தக் கட்சிகளின்முன் உள்ள சவால்.
-BBC
திராவிடம் அழிவிட்கே வித்திடும்.
அது அந்நியர் ஆட்சி தமிழர் மண்ணில்.
ஊகூம்..! ஏற்றுக்கொள்ள இயலாது! திராவிடக் கட்சிகள் தமிழர்களை மொட்டையடித்தார்களே தவிர எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை!
தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் தேவை. இங்கு நாம் மலேசியர் என்றால் அங்கு வாழும் யாவரும் தமிழ் நாட்டவர் அல்லவா? தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நன்மை செய்தால் வரவேற்க வேண்டும். நீங்கள் கூறுவது நம்மை வந்தேறிகள் இங்கு என்று கூறி நம்மை ஓரங்கட்டுவதற்கு சமம்.
ஆனால் வந்தேறிகள் நாங்கள்: இந்நாட்டு மொழியைக் கொள்ளையடிக்கவில்லை. இந்நாட்டு கலாச்சாரத்தை கொள்ளையடிக்கவில்லை.இந்நாட்டு விவசாயிகளை சாகடிக்கவில்லை. இந்நாட்டு சரித்திரத்தை மறைக்கவில்லை. இந்நாட்டு நதிகளைத் தடுத்து அணைக்கட்டவில்லை. இந்நாட்டு மணல்களை வேறு நாட்டுக்கு கடத்தவில்லை. இது போதுமே!