காஷ்மீரை தனி நாடாக மாற்றவிடாமல் தடுப்போர் தலைகள் வெட்டி தொங்கவிடப்படும்: தீவிரவாதி திகில் வார்னிங்

Kashmir-Mapடெல்லி: ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு, திடுக்கிடும் வீடியோ கிளிப் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஹுரியத் தலைவர்கள் தலைகள் வெட்டி ஸ்ரீநகரில் தொங்கவிடப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் அரசியல் ரீதியிலானது என்றும், மதம் சார்ந்தது இல்லை என்றும் ஹுரியத் தலைவர்கள் கூறியிருந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கும் போராட்டம் என கூறியுள்ளது ஹிஸ்புல் முஜாகிதீன்.

சண்டீகரில் பிடெக் படித்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவராக மாறிய ஜாகின் முசா என்பவர் ஆடியோவில் பேசியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை

ஸ்லைடுகள் மூலம் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது ஹிஸ்புல் முஜாகிதீன். அதில், காஷ்மீரை இஸ்லாமிய நாடாக மாற்ற இடையூறாக இருந்தால், ஹுரியத் தலைவர்கள் தலைகள் வெட்டி எடுக்கப்படும். அவை, ஸ்ரீநகரிலுள்ள லால்சவுக்கில் தொங்கவிடப்படும் என கூறப்பட்டுள்ளது. லால்சவுக் பகுதியில்தான் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் சிலர் சமீபத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹுரியத் தலைவர்கள்

ஹுரியத் தலைவர்களை சாத்தான்களின் வழிபாட்டாளர்கள் என வர்ணிக்கும் அந்த வீடியோ, நேரத்திற்கு ஏற்ப அவர்கள் மாறிக்கொண்டதாக எச்சரித்துள்ளது. ஹுரியத் தலைவர்கள் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுடன் காஷ்மீர் போராட்டத்திற்கு தொடர்பு இல்லை என கூறி அறிக்கை வெளியிட்ட நிலையில், இந்த தீவிரவாத அமைப்பு இவ்வாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

கடவுளின் ஒரே கேள்வி

இறந்த பிறகு, நீங்கள் முஸ்லிமா, முஸ்லிம் அல்லாதவரா என்ற ஒரு கேள்வியை மட்டுமே அல்லா கேட்பார் என குறிப்பிட்டுள்ள இந்த வீடியோ, எனவே கடவுளுக்கு அஞ்சி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இறைவனுக்கே அனைத்தும்

ஆட்டு மந்தைகளின் தேசத்தில், எப்படி சிங்கமாக வாழ வேண்டும் என்று கூறுகிறது ஒரு காட்சி. மேலும், இறுதியில் எல்லாம் அல்லாவுடையதுதான் என்றும் அந்த காட்சிகள் ஹுரியத் தலைவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் அமைந்துள்ளன.

தனி நாடு

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு இஸ்லாமிய நாட்டை உருவாக்க முயல்கிறதோ அவ்வாறே காஷ்மீரிலும் தனி நாட்டை உருவாக்க ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு உள்ளிட்டவை முயன்று வருகின்றன என்பது மீண்டும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.

tamil.oneindia.com

TAGS: