புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தினர் நீண்ட நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்த மாவட்ட நிர்வாகத்தினரும், மத்திய அரசு பிரதிநிதிகளும் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் உறுதியளித்தனர்.
போராட்டம் வாபஸ்
அதன் பேரில் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். தமிழக அரசும் உத்தரவாதம் அளித்ததால் மக்கள் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் சிறிது நாள்களுக்கு பின்னர் மத்திய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தன.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் 17 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீண்டும் போராட்டம்
மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம் என தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைப்பதாக மக்கள் ஆவேசமடைந்தனர். இதைத் தொடர்ந்து நெடுவாசல் மக்கள் கடந்த 32 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கௌதமன் சந்திப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இயக்குநர் கௌதமன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுவாசல் திட்டத்தை நிறைவேற்ற வருவோரை விரட்டி அடிப்போம். பல்வேறு ஆதாயங்களுக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்து வருகிறது. நெடுவாசலை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் உரிய பதிலடி தருவர் என்றார் அவர்.