சென்னை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பொது மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக மாநில அரசுகள் மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியும், நெடுஞ்சாலைகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி சாலைகளாக மாற்றியும் வருகின்றன.
தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் சம்பவத்துக்குப் பிறகு
இதனால் அந்த மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டு வரும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்கள் மதுக்கடைகளை சூறையாடி வருகின்றனர். திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் விஸ்வரூபமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் பெண்கள் டாஸ்மாக் கடைகளையும் மது பாட்டில்களையும் அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றமும் ஆதரவு
மதுக்கடை பிரச்சினையை கையில் எடுத்த சென்னை ஐகோர்ட்டு பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது, இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால் அங்கு மதுக்கடை திறக்க கூடாது என்று கூறியது.
டாஸ்மாக்கை சூறையாடும் பெண்கள்
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பெண்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் வடம் பூண்டி அடுத்துள்ள கொடியம் கிராம எல்லையில் உள்ள ஒரு கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் புதிதாக திறக்கப்பட இருக்கும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தால் திணறும் அதிகாரிகள்
இதேபோல் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் உறுதியளித்தப்படி 30 நாட்கள் ஆகியும் மதுக்கடை மூடப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முட்செடிகளை கொண்டு பாதையை மூடினர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை விரைவில் அகற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அரசுக்கு பெரும் நெருக்கடி
இதேபோல் கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மதுக்கடைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்துள்ளது. தமிழக அரசின் மிகப்பெரிய வருவாய் அளிக்கும் துறையான டாஸ்மாக்குக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்தும் போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நெருக்கடி அதிகரித்துள்ளது.