அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் மக்கள் பாதிப்பு

busதமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

எனினும், இந்த தொகை போதாது என அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடருவது என முடிவெடுத்து அறிவித்தன.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் 15000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் 1 லட்சம் பொலிசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டும் குறைவான அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகலாம்.

எனவே அரசு உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-lankasri.com

TAGS: