தமிழக மாணவன் வடிவமைத்த செயற்கைக்கோள்: அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃபாத் ஷாரூக் உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 64 கிராம் எடை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

கலாம்சாட் என பெயரிடப்பட்டுள்ள குறித்த செயற்கைக்கோளினை யூன் 21- ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவுள்ள நாசா ராக்கெட் சுமந்து செல்கிறது.

ரிஃபாத் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் திட்டப்பணிகள் 240 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் 12 நிமிடங்களுக்கு விண்வெளியின் மைக்ரோகிராவிட்டியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஃபாத் தயாரித்த செயற்கைக்கோள் ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ எனும் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் கீழ் நான்கு அங்குல அளவில் அதிகபட்சம் 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை வடிவமைக்க வேண்டும்.

கியூப் செயற்கைக்கோள்கள் சார்ந்து அதிகப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன்பின் எங்களது செயற்கைக்கோள் எடை குறைவானது என தேர்வு செய்யப்பட்டது என ரிஃபாத் தெரிவித்துள்ளார்.

‘செயற்கைக்கோள் முழுக்க கார்பன் ஃபைபர் பாலிமர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும், சில பாகங்களை உள்நாட்டிலேயே வாங்கி பயன்படுத்தினோம்’, என்றும் ரிஃபாத் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் வடிவமைத்த செயற்கைக்கோளை நாசா ராக்கெட் விண்வெளிக்கு சுமந்து செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

-lankasri.com

TAGS: