விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியராஜ் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊருக்குள் வரும் மதுக்கடைகளை சூறையாடும் மக்கள் மது பாட்டில்களையும் சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியராஜ் என்பவர் திருத்தங்கல் குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.