சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அதை தடுக்க சென்னை மெரீனா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது.
இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம்க, மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர்.
தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17-ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த மே 17 என்ற இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கெனவே மெரீனா போராட்டம் போலீஸாருக்கு ஏற்படுத்திய தலைவலியை அவர்கள் மறக்க மாட்டார்கள். தற்போது தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வரக் கூடும் என்று போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்.
அதையும் மீறி இன்று மெரீனாவில் கூடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் போலீஸாரின் கெடுபிடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.