கோவை: ஈஷா யோகா மையத்துடன் இணைந்து சிறுவாணி அணையை தூர்வார முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளதற்கு மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது நில மோசடி, பெண்களை மூளைச் சலவை செய்து மடத்திலேயே வைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன் மீது ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன.
அண்மையில் பெரிய சிவன் சிலை திறப்பு விழா ஒன்றை சிவராத்திரி அன்று நடத்தினார். அந்த சிலையை நிறுவுதற்காக வனப்பகுதிகளை அழித்ததாகவும், அப்பகுதி மக்கள் மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது.
மகனைக் காணோம்
கோவையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தனது 2 மகள்களை ஜக்கி வாசுதேவ் சன்னியாசியாக்கிவிட்டார் என்று புகார் தெரிவித்தார். அந்த புகார் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மடத்தில் அடைக்கப்பட்ட மகன்
ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் அரிகரன் என்பவரை மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதுவும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
கழிவறையை சுத்தம் செய்ய குழந்தைகள் கட்டாயம்
ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக் கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சானத்தை அள்ளச் செய்வது, பைத்தியமாக்குவது என கொடுமைப்படுத்துவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகேந்திரன் தெரிவித்தார்.
உள்ளிருந்தே புகார்
யோகா மையத்திற்கு வரும் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக அந்த மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில் குமாரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு எதற்கும் ஜக்கி வாசுதேவ் அசைந்து கொடுக்கவில்லை.
பிரதமர் வருகை
இதே போன்று, வனப்பகுதியில் சட்டவிதிகளை மீறி, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிவனுக்கு சிலை அமைத்தது பெரிய சர்ச்சையை தமிழகத்தில் உருவாக்கியது. சிவன் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் அழைக்கப்பட்டார்கள். கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடியும், முதல்வர் பழனிச்சாமியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மக்கள் அதிர்ச்சி
பெண்கள் மீதான புகார், நில மோசடி என அடுக்கடுக்கான புகார்களை சந்தித்து வரும் ஜக்கி வாசுதேவிற்கு தொடர்ந்து தமிழக அரசின் ஆதரவு அளித்துக் கொண்டிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. தற்போது போது சிறுவாணி அணையை தூர்வார ஈஷா மையத்துடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். இது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மோடிக்கு பிடித்ததால்…
பெரிய அளவிலான நிலமோசடி, பெண்கள் புகார் என அடுக்கடுக்காய் புகார் இருந்தும் ஈஷா யோகா மையத்தின் மீதும், ஜக்கி வாசுதேவ் மீது முதல்வர் பழனிச்சாமிக்கு ஏன் இவ்வளவு பாசம் என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடிக்கு ஜக்கியை பிடிக்கும் என்பதால் பழனிச்சாமிக்கும் பிடிக்கிறதோ என்னவோ..